சீனா : தொழிற்சாலை  விபத்தில் 30 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்

பீஜிங்

சீனாவின் ஷாங்காய் தெற்குப் பகுதியில் நேற்று ஒரு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ளது நிங்போ என்னும் ஒரு பரபரப்பான துறைமுக நகரம்.   இங்கு முக்கியமான தெருவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று காலை 8.55 மணிக்கு பயங்கரமான வெடிச் சத்தத்துடன் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.  தொழிற்சாலை முழுவதுமாக இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளது.

இந்த விபத்தினால் பக்கத்திலுள்ள குடியிருப்புக்கள் அதிர்ந்துள்ளது.  சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.   அங்கு யாரும் இன்னும் குடியேறாததால் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

தீயணைப்புத் துறையினரும் மீட்புப் படையினரும் இதுவரை 30 சடலங்களை மீட்டுள்ளனர்.  இது தவிர ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.   காயமடைந்தோர் எண்ணிக்கை சரியாக அறிவிக்கப்படவில்லை.    எரிவாயுக் குழாய் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.