கொரோனா வைரசும் விரட்டும் வதந்திகளும்…

ஜெனீவா  

     கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம்  பட்டியலிட்டுள்ளது.

     அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள் அச்சம் மற்றும் ஐயங்களையும் விதைத்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு விதமான வதந்திகளும் பலரால் முன்வைக்கப்படுகிறது. 

 

 

தடுப்பு மருந்துகளால் மட்டுமே குணமாகும் ஆற்றல் உடையது கொரோனாத் தொற்று. அதற்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாத் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதாரக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. 

      வெப்பம் மிகுந்த இடங்களில் கொரோனா பரவாது, வெந்நீரில் குளிப்பதாலும், ஹேண்ட் டிரையர்  பயன்படுத்துவதாலும் அக்கிருமி அழிந்து விடும் என்று ஒரு சிலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அனைத்து வெப்பநிலையிலும் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும்.

         கொரோனா வைரசை புற ஊதா கதிர்களும், ஆல்கஹால் மற்றும் குளோரின் போன்றவையும் அழிக்கும் எனவும் ஒரு சாரர் நம்புகின்றனர். இதிலும் உண்மையில்லை. ஆல்கஹால், புற ஊதாக் கதிர்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

      கொரோனாவை,  நிம்மோனியா தடுப்பூசி  மற்றும் ஆண்ட்டிபயோடிக் மருந்துகள் எதிர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் நிம்மோனியா தடுப்பூசி, ஆண்ட்டிபயோடிக்  மருந்துகள் பாக்டீரியாவை மட்டுமே எதிர்க்க உதவும்.

      அறிவியலால் நிறுவப்படாத செய்திகளை நம்பிக் கொண்டு அச்சப்படுவதை தவிர்த்து நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என WHO, உலக மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

      ஊட்டமுள்ள உணவை உட்கொண்டு, வீட்டிலேயே இருப்பதும், தூய்மையை கடைபிடிப்பதும் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

        மேலும் அதன் அறிகுறிகள் கண்டறியப் பட்டாலும் நம்பிக்கையோடு,  தகுந்த மருத்துவ சிகிச்சையுடன், நம்மை தனிமைப் படுத்திக் கொண்டால் கொரோனாவை நிச்சயம் வெல்லலாம்…