மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணைமுதல்வராக பதவி ஏற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார், தங்களது பதவிகளை  ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் எழுந்துள்ள அரசியல் குழப்பத்திற்கு இடையே கடந்த சனிக்கிழமை, தேசியவாத  கட்சியின் சட்டமன்ற தலைவர் அஜித்பவார் ஆதரவை பெற்று, பாஜக ஆட்சி அமைத்தது.  பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்  தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

இந்த திடீர் பதவி ஏற்பு நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதன்படி,  நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையில் அஜித்பவாருக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், மீண்டும் சரத்பவாரிடமே சென்றுவிட்ட நிலையில், அஜித்பவார் தனிமரமானார். இதனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து, முதல்வர் பட்னாவிஸ், துணைமுதல்வர் அஜித் பவார் ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அஜித்பவார் தனது துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெயிான நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-சும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பிற்பகல் 3.30 மணிக்கு தனது ராஜினாமா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பெரும்பான்மை நிரூபிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.