மகாராஷ்டிரா : 

மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பாஜக முதல்வர் பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், என்.சி.பி கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், வெளிப்படையாக பெரும்பான்மையை  நிரூபிக்காத பாஜக பதவி விலக வேண்டும் என்று ர்சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்கிடையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் அஜித் பவார் கொடுத்த ஆதரவு காரணமாக, பாஜக அரசு பதவி ஏற்றது. கடந்த சனிக்கிழமை காலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த பதவி ஏற்பு நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை  கண்டித்து, சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி,  பாஜக மற்றும் ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில், இன்று காலை மாநில கவர்னர் கோஷ்யாரியை சந்தித்த, மஹா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள், தங்களுக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறி, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தில் பெரும்பான்மை உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும், ஏற்கனவே ஆட்சி (நவம்பர் 23ஆம் தேதி) அமைத்துள்ள பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல்வர் பட்னாவிஸ், துணைமுதல்வர் அஜித் பவார் உடனே  பதவி விலக வேண்டும் என்று கூறினார்.