மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பெரும் திருப்பமாக, நேற்று காலை பாஜக அரசு பதவி ஏற்றது. பாஜகவுக்கு ஆதரவு வழங்கியதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பதவி ஏற்பு விவகாரம் இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட உள்ள நிலையில், சட்டப்பேரவையில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன. தற்போதைய நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே உள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே,  இதுபோல, கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவும் பதவி ஏற்று, பின்னர் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல், சட்டமன்றத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டே, அவமானத்துடன்  வெளியேறிய காட்சி அனைவரின் மனக்கண்ணிலும் நிழாலாடுவதுபோல, தேவேந்திர பட்னாவிசுக்கும் அதுபோன்ற நிலைமை எற்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

288உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கு பெரும்பான்மை நிரூபிக்க 144 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பதில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்தது.

பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்,  காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. மார்க்சிய கம்யூனிஸ்டு 1 இடமும், ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி 1 இடமும், ஓவைசியின் அகில இந்திய மஸ்ஜித் கட்சி 2 இடமும் (All India Majlis-e-Ittehad-ul-Muslimeen), சமாஜ்வாதி கட்சி 2 இடங்களும்,  சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், பாஜகவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில், 54 உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளது. அஜித்பவாருடன் 7எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாகவும், மற்றவர்கள் தங்களது கட்டுப்பாட்டில்இருப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில் பாஜக கைவசம் வைத்துள்ள 105 உறுப்பினர்களுடன்,  அஜித்பவார் உள்பட 7 உறுப்பி னர்கள் மற்றும் நவநிர்மான் கட்சியின் 1 உறுப்பினர் ஆதரவுடன் 113 பேர் மட்டுமே உறுதியாக உள்ளனர். மேலும் பல சுயேச்சைகள் ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எத்தனை சுயேச்சைகள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், சமாஜ்வாதி, ஓவைசி கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வராது. அதனால் சுயேச்சைகளையும், சிறுசிறு கட்சிகளின் உறுப்பினர்களையும், பாஜக தங்களுக்கு ஆதரவாக திரட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் 288 எம்.எல்.ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக் களின் ஆதரவு வேண்டும் என்பதால், பாஜக – அஜித்பவார் கூட்டணிக்கு மேலும் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. பெரிய கட்சிகளை தவிர்த்து மீதமுள்ள 29 எம்.எல்.ஏக்களில், தலா 2 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் விகாஸ் ஆகாதி ஆகியவையுடன், தலா ஒரு உறுப்பினர்களை கொண்டிருக்கும் மேலும் 2 சிறிய கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. அதனால் அந்த 6 உறுப்பினர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பது சந்தேகமே.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், தேவேந்திர பட்னாவிஸ் வரும் 30ந்தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேவேளையில் இன்று உச்சநீதி மன்றத்தில்நடைபெற உள்ள அவசர வழக்கிலும், உச்சநீதி மன்றம் உடனே பெரும்பான்மை நிரூபிக்க பட்னாவிசுக்கு உத்தரவிட்டடால்…. பட்னாவிஸ் நிலை கேள்விக்குறியே….

தற்போதைய நிலையில், பட்னாவிஸ் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், எடியூரப்பாவின் நிலைதான் பட்னாவிசுக்கும் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.