நாமக்கல்

ங்கிக் கடன்களை ஆன்லைன் மூலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த போலி கால் செண்டர் கும்பலை சென்னை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

தற்போது வேலை இல்லாமை அதிகரித்து வருகிறது,  இதைப் பயன்படுத்தி பல இளைஞர்களை மோசடி கும்பல் தங்கள் மோசடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றன.  இவர்கள் 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தோருக்குப் பணி வாய்ப்பு தருவதாகக் கூறி மாதம் ரூ.8000 முதல் ரூ.15000 வரை மாதச் சம்பளத்தில் கால் செண்டர் வேலைக்கு அமர்த்துகின்றனர்.   அதன் மூலம் மக்களை ஏய்த்து வருகின்றனர்.

இந்த போலி கால் செண்டர் மூலம் நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே கடன் வாங்கித் தருவதாக ஆசையை தூண்டுன்கிறனர்.   இதற்கு ஒப்புக் கொள்பவர்களிடம் இருந்து கால் செண்டர் உரிமையாளர் அவர்களது ஆதார் அட்டை, புகைப்படம், டெபிட் கார்ட் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தெரியாமலேயே வேறு தனியார் வங்கிகளில் கணக்கு துவங்கி உள்ளனர். இதற்கு வங்கி ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்கள் டெபிட் கார்ட் வழியாக ஓ டி பி மூலமாகக் கடன் கேட்டோர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.   யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இந்த பணத்தை அதே பெயரில் துவங்கப்பட்ட போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி அதிலிருந்து தங்கள் கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளனர்.    இவ்வாறு ஏமாந்தவர்களில் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் உள்ளார்.

அவர் அடையாறு சைபர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி அந்த பெண்ணிடம் டாடா கேபிடல் என்னும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய ஒரு பெண் ரூ.2 லட்சம் தனி நபர் கடன் ஆன்லைன் மூலமாக வழங்குவதாக கூறி ஆதார், வங்கி விவரங்களைப் பெற்றுள்ளார்.   அதன் பிறகு கடன் உறுதி ஆகி விட்டதாகவும் அவருக்கு ஒரு ஓடிபி வந்திருக்கும் எனவும் அதை தங்களிடம் தெரிவிக்குமாறும் அதே பெண் கூறி உள்ளார்.

அதைத் தெரிவித்த இந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து உடனடியாக ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.  இதனால் அதிர்ந்த பெண் புகாரை அளித்துள்ளார்.  சைபர் கிரைம் காவல்நிலைய விசாரணையில் இந்த கும்பல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இயங்குவது சிக்னல் மூலம் தெரிய வந்தது.  உடனடியாக  அந்த கும்பலை வளைத்துப் பிடித்துள்ளனர்.

இந்த கும்பலின் தலைவர் குமரேசன், விவேக், மற்றும் 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்த கும்பலில் இந்த மோசடி குறித்து அறியாத பலரும் பணியில் உள்ளனர்.   குறிப்பாக 17 வயதான ஏழைப் பெண்கலை தேர்வு செய்து அவர்களைப் பேசப் பயிற்சி அளித்து பொதுமக்களிடம் இவர்கள் மோசடி நடத்தி உள்ளனர்.  இது போல் ஆசை வலை வீசுவோரிடம் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.