திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை, அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருகலைக்கலைப்பில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையில், காவல் படையினர் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் சோதனை நடத்தினர். பின், அந்த கடையின் உரிமையாளர் கவிதா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவிக்க, அக்கடைக்கு வந்த பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணயில், அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய இருவரையும் திருவண்ணாமலை கிழக்கு காவலர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போலி டாக்டர் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கவிதா 10ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டதால் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோர், பேன்ஸி ஸ்டோரில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு, பேன்ஸி ஸ்டோருக்கு சீலும் வைத்தனர்.