போலி இ-பாஸ் விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க உயர்நீதி மன்றம் மறுப்பு..

சென்னை:

போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு செல்வோர்  இபாஸ் பெற்று பயணிக்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்தது. ஆனால், இதிலும் சில அரசு ஊழியர்கள் முறைகேடு செய்து பணம் சம்பாதித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் போலி இ பாஸ் தயாரித்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக வருவாய்துறையை சேர்ந்த குமரன், உதயகுமார் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இந்த நிலையில்,  இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட இருவர் சார்பில்  ஜாமீன் வழங்க கோரி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையின் போது, அவர்களுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார், ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோருக்கு ஜாமீன்  வழங்க மறுத்து விட்டது.