சென்னை: போலி இருப்பிட சான்றிதழ் காரணமாக, 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணாக்கர்களும் மருத்துவ படிப்பில் இடம்பிடிக்கும் வகையில் அரசு 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. அதன்மூலம் அரசு பள்ளி மாணாக்கர்கள் சுமார் 400 பேர் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிட்டபோது, அதில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பெயர் பட்டியல் வெளியானது இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலினும், 2020-21-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன. இன்னும் தொடருகிறது அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியல் முறைகேடுகளும், முன்னுக்குப்பின் முரண்பாடுகளுமாக உள்ளது. நீட் தேர்வையே ஆள் மாறாட்டம் செய்து எழுதினார்கள்; அதுவும் அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அப்படி எழுதியவர்களில் சிலர் ஆதார் எண் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆள்மாறாட்ட மோசடியையே கைகழுவி விட்டது அ.தி.மு.க. ஆட்சி. நீட் தேர்வில் வேறு மாநிலத்தவர், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இங்கும் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியிலேதான் என்று கடுமையாக சாடியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணையில் சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  நடத்தப்பட்ட ஆய்வில், 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், ஆய்வுக்கு பிறகு, அந்த 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.