தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருந்துவரும் சூழலில், முகக் கவசங்களுக்கான தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளது.
மக்கள் பலரும் பலவிதமான முகக்கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள், N95 முகக்கவசம்தான் தரமானதாக கருதப்படுகிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த முகக்கவசம்தான் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பெரியளவில் பரவிவரும் நிலையில், இந்தவகை முகக்கவசத்தை தயாரிக்கு முக்கிய நிறுவனங்களான அமெரிக்க நிறுவனம் 3M மற்றும் மும்பையின் மாக்னர் ஹெல்த் & சேஃப்ட்டி ஆகியவற்றால், தேவையை ஈடுசெய்யும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, டாடா மெமேரியல் சென்டர் போன்ற மருத்துவ நிலையங்கள், வேறுபுதிய முகக்கவச உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து N95 முகக் கவசங்களை வாங்குவதற்கு முடிவுசெய்தன.
அதேநேரம், அந்நிறுவனங்களிடமிருந்து வாங்கும் முகக் கவசங்களின் தரத்தையும் பரிசோதிக்க முடிவெடுத்தன.
பொதுவாக, N95 முகக் கவசமானது, 0.3 மைக்ரான் அளவிற்கும் பெரிதான துகள்களை 95% அளவிற்கு வடிகட்டும். ஆனால், புதிய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட முகக் கவசங்களை பரிசோதனைக்கு உட்படுத்துகையில் அதிர்ச்சியே கிடைத்தது.
N95 முகக்கவசம் போலவே இருந்த அவை, தரத்தில் மோசமாக இருந்தன. 0.3 மைக்ரான் அளவைவிட பெரிதான துகள்களை, இந்த போலி N95 முகக் கவசங்கள் 60% முதல் 80% வரையே வடிகட்டியது கண்டறியப்பட்டது.
நன்றி: த வயர்