புனே :
புனேவைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தற்போது முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து, அடுத்த கட்டமாக மனிதர்களிடையே பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே பரிசோதனை நடத்த இந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில், கோவாக்சின் மருந்தை தனது உடலில் இந்நிறுவனத்தின் துணை தலைவர் மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ் பரிசோதித்து பார்த்ததாக சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸப்பில் செய்திகள் பரவியது.

இதனை மறுத்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனம், விகே ஸ்ரீநிவாசுக்கு நடத்தப்பட்டது வழக்கமான பரிசோதனை தானே தவிர, கொரோனா தடுப்பூசி பரிசோதனை அல்ல, அதே நேரத்தில், தடுப்பூசிகளை முழங்கையில் போடமுடியாது என்றும், சதை பற்றான தோள்பட்டைக்கு கீழுள்ள மேல்கை பகுதியிலோ அல்லது தடுப்பு மருந்தாக வாய் அல்லது மூக்கு வழியாகவோ தான் செலுத்த முடியும் என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ், மக்கள் தொகையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸை ஒழிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பலனாக பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது.
கோவாக்சின் எனும் இந்த மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா ஹெல்லா தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் என்பதும், ஆரம்ப நாட்களில் ‘பேயர்’ ரசாயன கம்பெனியில் விவசாய பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், தனது அமெரிக்க வேலையை உதறிவிட்டு, ஹைதராபாதில் பாரத் பயோ டெக் என்ற பெயரில் புதிதாக மருந்து கம்பெனி தொடங்கினார், ஹெப்பாடிட்டீஸ் தடுப்பூசி தயாரித்துவந்த இந்த நிறுவனம், ஜிகா வைரஸ்க்கான தடுப்பூசியை உலகில் முதல் முதலில் கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது, இது தவிர பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் இந்த நிறுவனம் தயாரித்துவருகிறது.
தற்போது இந்நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் மருந்து பரிசோதனையின் முடிவில் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15 அன்று விற்பனைக்கு கொண்டுவர இந்த நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து திட்டமிட்டுள்ளது. இந்த மருந்து சந்தைக்கு வரும் போது இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தற்போது உள்ளதை விட பன்மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சீன பொருட்களை கைகழுவி இந்தியா தனது தற்சார்பு கொள்கையில் பெருமை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.