டெல்லி:

குறைந்தபட்சம் 83 சதவீத இந்திய ஊடக நுகர்வோர் போலி செய்திகள் பரவுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதில் 73 சதவீதம் பேர் போலி செய்திக்கும் உண்மை செய்திக்கும் உள்ள வேறுபாட்டை அறியமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்று பிபிசி நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உண்மை செய்தி எது? இட்டுக்கட்டி வெளியிடப்படும் செய்தி எது? என்று வேறுபடுத்தி பார்க்க முடியாமல் திணறுகின்றனர்.

மேலும், அந்த ஆய்வு மூலம், போலி செய்திகள் அதிக எண்ணிக்கையில் பரவுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக இன்டர்நெட் உண்மையை தடுத்து பிரபலமான கருத்தை ஆட்டுவிக்கிறது. போலி செய்திகளை பரப்புவதில் பிரபலமான பிராண்ட் செய்தி நிறுவனங்கள் கூட முன்னிலை வகிக்கிறது என்று 83 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘‘செய்திகளின் மதிப்பு மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவம்’’ என்ற தலைப்பில் பிபிசி இந்த ஆய்வை நடத்தியது. மாணவர்கள் மத்தியிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 85 சதவீத இந்தியர்கள் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச செய்திகள் முக்கியம் என்று தெரிவித்தனர். சர்வதேச நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தியர்களுக்கு டிவி முக்கிய பங்காற்றுகிறது. இதில், டிவி என 93 சதவீதம் பேரும், சமூக வளை தளம் என 80 சதவீதம் பேரும், செய்திதாள் என 62 சதவீதம் பேரும், புதிய செயலிகள் என 54 சதவீதம் பேரும், இணையதளம் என 45 சதவீதம் பேரும், செய்தி திரட்டுவோர் மூலம் என 44 சதவீதம் பேரும் தெரிந்து கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

94 சதவீத இந்தியர்கள் மொபைல் போன் மூலம் சர்வதேச புதிய செய்திகளை குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் அதிகளவில் பகிர்கின்றனர். மீடியாக்களில் பிரபல நிறுவனங்கள் விளம்பரம் செய்வது குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பாரம்பரியமிக்க செய்தி பதிப்பாளர்களின் டிஜிட்டல் மீடியாக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். செய்தி வளைதளங்கள் மூலம் மட்டும் விளம்பரம் செய்ய பிரபல நிறுவனங்கள் 40 சதவீதம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்தியாவில் நம்பிக்கைக்கு உரிய செய்தி சேனல் அல்லது வளைதளங்களில் விளம்பரம் செய்வதன் மூலம் பலன் கிடைப்பதாக 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நம்பிக்கை இல்லாத சேனல்களில் விளம்பரம் செய்தால் விற்பனை பாதிக்கப்படுவதாக 10ல் 7 பேர் தெரிவித்துள்ளனர்.