பொய்ச் செய்திகளுக்குள் புகுந்து வரும் சாகசம்!

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன்

ந்தியாவில் சமூக ஊடகங்கள் வழியாகப் பொய்ச் செய்திகள் பரவுவது பற்றிய ஒரு ஆய்வறிக்கையை பன்னாட்டு ஊடக நிறுவனமான பீபீசி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும், ஆளும் கட்சியினருக்கு ஆத்திரத்தைக் கிளறிவிட்டிருக்கக் கூடும். பின்னே, பொய்ச்செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த கூகுள், முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு எவ்வளவு கெடுபிடிகள் கொடுத்தோம், வாட்ஸ்அப் தளத்தில் ஒரே நேரத்தில் ஒரு தகவல் பகிர்ந்துகொள்ளப்படுகிற எண்ணிக்கையை ஐந்தாகக் குறைக்க வைத்தோம், அதற்கப்புறமும் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டால் எப்படி? அதுவாவது பரவாயில்லை, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள்தான் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி பரப்புகிற வேலையைத் தீவிரமாகச் செய்கிறார்கள் என்பதாகவும் சொல்கிற அறிக்கையை எப்படி சகித்துக்கொள்வது?

அறிக்கையை வெளியிட்டதோடு, அது தொடர்பான விவாத நிகழ்ச்சியையும் பீபீசி நடத்தியது. அதில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோணங்களில் பொய்ச்செய்திகளின் பாதிப்புகள் பற்றிப் பேசினார்கள். தன்னை முன்னிறுத்திக்கொள்வதற்காகவே பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்றார் ஒருவர். ஆனால், ஏதோவொரு வதந்தியை முதன்முதலில் ஊதிவிடுகிற யாரும் தன்னுடைய சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. லட்சக்கணக்கானோருக்கு அது பகிரப்பட்டபிறகு முதலில் பதிவிட்டது யார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆகவே தன்னை முன்னிலைப்படுத்துகிற நோக்கத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், தாங்கள் விதைத்த நச்சுவிதை முளைவிட்டுச் செடியாகி மரமாகி நிற்பதில் அந்த யாரோ சிலர் வக்கிரமாகச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

ஊருக்குள் நுழைந்த ஒரு புதிய ஆள் பிள்ளை பிடிப்பவர் என்ற சந்தேகத்தை ஒருவர் வெளிப்படுத்த, அது மற்றவர்களுக்குப் பரவ, மொழி தெரியாததாலோ, பதற்றத்தாலோ அந்தப் புதிய ஆள் தன்னை இன்னார் என்று சொல்ல முடியாமலிருப்பார். சில நேரங்களில், அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலும் அதைப் பொருட்படுத்தாத கும்பல்மனநிலை அங்கே எல்லோரையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும். எதிரியை வென்ற பெருமையில் தனக்குப் பங்கில்லாமல் போய்விடக்கூடாது என்ற “ஆண்மையுடன்” கும்பலில் ஒவ்வொருவரும் உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, கருங்கல் என்று ஆயுதமேந்த அந்த அப்பாவி துடிதுடித்துச் செத்துப்போவார். சென்ற ஓராண்டில் மட்டுமே இப்படி நாட்டின் பல பகுதிகளில் 32 பேர் இப்படிக் கும்பல் கொலைவெறிக்கு இரையாகிவிட்டனர் என்று பீபீசி கூறுகிறது.

கடந்த ஜூலையில் கர்நாடக மாநிலத்தின் பிடார் மாவட்டத்தில் ஒரு பொறியியலாளர் கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் வந்த, இரண்டு பொறியியல் வல்லுநர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிடார் நகரில் தங்களுடைய நண்பர்களைச் சந்தித்துவிட்டு ஹைதராபாத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள், அந்தக் கிராமத்தின் வழியாக வந்தபோது வண்டியை ஓரமாக நிறுத்தியிருந்தனர். அருகில் வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தனர். அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு உள்ளூர்ப் புலனாய்வு வல்லுநருக்கு சந்தேகம் ஏற்பட, வாட்ஸ்அப் தொழில்நுட்ப அறிவுத் துடிப்புடன் அதை வேறு சிலருக்குத் தெரிவிக்க, அவர்கள் மற்றவர்களுக்குப் பகிர, அங்கே கூடிய சுமார் 2,000 பேரும் நெஞ்சின் ஈரம் துடைக்கப்பட்டவர்களாக வன்முறையில் இறங்கினர். அதற்கு முன் மஹாராஷ்டிராவில் ஐந்து பேர், அஸ்ஸாமில் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழங்குடிப் பெண் இதே போல் கொல்லப்பட்டார்கள்.

அதன்பிறகுதான், பொய்ச்செய்திகள் பரவுவதைத் தடுக்க ஏதோ செய்வதாகக் காட்டியாக வேண்டிய நிலையில், அரசின் கெடுபிடியால் வாட்ஸ்அப் பதிவுகளை ஒரே நேரத்தில் 5 தொடர்புகளுக்குத்தான் பகிர முடியும் என உச்சவரம்பு கட்டப்பட்டது. ஆனால், வாட்ஸ்அப் வழியாகப் பொய்ச்செய்திகள் பரப்பப்படுவது கொஞ்சமும் குறையவில்லை என்று பீபீசி அறிக்கை தெரிவிக்கிறது. பொய்ச்செய்தி என்றால் இப்படிப்பட்ட கும்பல் வன்முறை தொடர்பானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற எல்லாவகையான பொய்ச்செய்திகளோடும் ஒப்பிட்டால், பிள்ளைபிடிக்கிறவர்கள் என்ற சந்தேகம் பரப்பப்படுவது மிகக்குறைவுதான். அது அந்த ஊரோடு நின்றுவிடும்.

ஆனால், அரசின் நோக்கம் தன்னைப் பற்றிய, தனது நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் நாடு முழுவதும் பகிரப்படுவதை முடிந்த அளவுக்குக் குறைப்பதுதானோ என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அரசியல், பொருளாதாரம், மதவிவகாரம், சாதிப்பிரச்சனைகள், சுற்றுச்சூழல் ஆகியவை தொடர்பான பொய்ச்செய்திகள் மிகுதியாகப் பரப்பப்படுகின்றன. மறுபடி மறுபடி பகிரப்படுகின்றன.

சில நேரங்களில் நாம் தொடர்பில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில், ஒரு குடும்பமே கடுந்துயரத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஒருவரிடமிருந்து தகவல் வரும். சிறிது நேரத்தில், “இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த தகவல், எதையும் சரிபார்த்துப் பகிருங்கள்” என்று இன்னொருவரிடமிருந்து எச்சரிக்கை வரும்.

இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய, பொய்ச்செய்திகள் மிக அதிகமாக உலா வருகிற மூன்று நாடுகளில் பீபீசி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் உள்ள 80 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய ஒப்புதலுடன், அவர்கள் தங்கள் வீடுகளில் எந்த அளவுக்கு ஊடகச் செய்திகளிலும் விவாதங்களிலும் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை ஆராய்வதில் ஆய்வுக் குழுவினர் பல நூறு மணி நேரம் செலவிட்டுள்ளனர். வாட்ஸ்அப், முகநூல் தளங்களில் ஒரு வார காலம் அவர்கள் எப்படிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள் என்று கவனிக்கப்பட்டது. இந்தியாவில் ட்விட்டர், முகநூல் வழியாகப் பொய்ச்செய்திகள் பரவுவது பற்றியும், அதன் பின்னணியில் அரசியல் சார்பு இருக்கிறதா என்றும் விரிவாக ஆராயப்பட்டது. அதற்காக 16,000 ட்விட்டர் கணக்குகளையும், 3,000 முகநூல் பக்கங்களையும் குழுவினர் அலசியுள்ளனர்.

பொதுவாக இயற்கைச் சீற்றங்கள் பற்றிய அச்சம், கொடும் நோய்கள் பற்றிய கவலை, எதிரிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய கலக்கமும், முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாமே என்ற எண்ணமும், இப்படிப்பட்ட தகவல்களை உடனே பகிர்வதற்குத் தூண்டுகின்றன. கென்யாவில் நிதி முறைகேடுகள், தொழில்நுட்ப மோசடிகள் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் மொபைல் விட்டு மொபைல் தாவுகின்றன. நைஜீரியாவில் பயங்கரவாதம் பற்றிய பகீர் தகவல்களும் ராணுவம் தொடர்பான கதைகள் மொபைல்களின் வழியே பயணிக்கின்றன. மக்கள் சரியான தகவல்களையும் பார்க்கிறார்கள், பொய்யான தகவல்களையும் பார்க்கிறார்கள், ஆனால் இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை, உடனே தங்களுடன் இணைப்பில் உள்ளவர்களுக்குப் பகிர்கிறார்கள்.

தேசியவாதமும் பொய்ச்செய்தியும்

இந்தியாவில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்குத் தூண்டுதலாக இருப்பது ‘தேசியவாதம்’ என்கிறார்கள் ஆய்வுக் குழுவினர். இங்கே மேலெழுந்து வருகிற தேசியவாத அலை, தேசிய அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான அவாவை ஏற்படுத்துகிறது. அந்த அவாவின் முன் ஒரு செய்தி உண்மையானதா போலியானதா என்பது முக்கியமற்றுப் போகிறது என்கிறார்கள் குழுவினர். இந்த உணர்வைப் பயன்படுத்திக்கொண்டு பிரதமர் மோடி பற்றிய, அவரை சாகச நாயகராகக் காட்ட உதவுகிற பதிவுகள் விருப்பத்தோடும் விசுவாசத்தோடும் பகிரப்படுகின்றன. தேசப்பற்று வேறு, தேசியவாதம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாத சூழ்நிலையிலும்,  புரிந்துகொள்ளவிடாத சூழ்ச்சியிலும் சிக்கியவர்கள் இதைச் செய்கிறார்கள்.

ஒரு எடுத்துக்காட்டு: அமெரிக்காவில் ஒரு அமைப்பு, உலகில் மிக முக்கியமான 10 பேர் என மக்கள் யாரைக் கருதுகிறார்கள் என்று ஒரு ஆய்வை நடத்தியதாகவும். அவர்களில் நரேந்திர மோடி ஒருவர் என்று தெரியவந்ததாகவும் இந்தியாவில் ஒரு வாட்ஸ்அப் தகவல் பகிரப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் எந்த அமைப்பும் அப்படியொரு ஆய்வை நடத்தவில்லை! அது மட்டுமல்ல, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பற்றியும் இதே போல் பரப்பப்பட்டது! இதை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது!

அவர்கள் வெளியிட்டுள்ள வரைபடத்தின்படி, இந்தியாவில் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஆளுமை செலுத்துவது நடப்பு அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பான தகவல்கள்தான். அதில் கிட்டத்தட்ட 30 சதவீத இடத்தைப் பிடித்திருப்பது மோடி தொடர்பான தகவல்கள். அதே அளவுக்கு தொழில் / வர்த்தகம் தொடர்பான தகவல்கள் பரவுகின்றன. மிகக் குறைவான விகிதத்தில் பகிரப்படுவது பாஜக-வுக்கு எதிரான செய்திகள் என்று அறிக்கை கூறுகிறது. ஆய்வுக் குழுவினர், “சமூக ஊடகங்களில் வலதுசாரி வலைப்பின்னல்கள், இடதுசாரி வலைப்பின்னல்களை விடப் பல மடங்கு கட்டமைக்கப்பட்டதாக இருக்கின்றன, இதனால் தேசியவாதத்தோடு இணைந்த பொய்க்கதைகள் மேலும் வேகமாக உந்தப்படுகின்றன,” என்று கூறியுள்ளனர்.

இடதுசாரிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஜனநாயக இயக்கங்களும் தங்களது ஆதரவாளர்களை சமூக ஊடகங்களில் மிகுந்த முனைப்போடு செயல்பட ஊக்குவித்தாக வேண்டியுள்ளது என்பது சொல்லாமலே புரிகிறது. எனது முகநூல் பக்கத்திலேயே, மோடி அரசையும், சங் பரிவாரத்தினரையும் விமர்சிக்கிற கருத்துகளை நான் பதிவிடுகிறபோது, பாஜக ஆதரவாளர்களிடமிருந்துதான் அதிகமான எதிர்வினைகள் வருகின்றன. என்னைத் திட்டியோ, குறிப்பிட்ட வாதத்திற்குத் தொடர்பே இல்லாத செய்திகளுக்கு இணைப்புக்கொடுத்தோ வருகிற அந்த எதிர்வினைகளுக்கென்றே பலர் இருக்கிறார்கள்! அவர்கள் எல்லோருமே பணத்துக்காக, சுயநலத்துக்காகச் செயல்படுகிறவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களை இயக்குவது முதலில் கூறிய தேசியவாதப் பெருமித உணர்வுதான். தாங்கள் பரப்புகிற செய்திகள் மட்டுமல்ல, தங்களை இயக்குகிற தேசியவாத உணர்வே கூட மெய்யானதுதானா என்ற சிந்தனை வருகிற வரையில் அவர்கள் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள்.

இடதுசாரிகளிலும் ஜனநாயகவாதிகளிலும் பலர் நடப்பதை வேடிக்கை பார்க்கிறவர்களாக, மிஞ்சி மிஞ்சிப்போனால் ‘லைக்’ போடுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். என் போன்றோரின் கருத்துகளுக்கு ‘லைக்’ போடுவார்கள், சங் பரிவாரத்தினரின் எதிர்வினைகளுக்கு நாங்கள் அளிக்கிற மறுவினைகளுக்கும் லைக் போடுவார்கள். கொஞ்சம் அதிகமாகப் போனால், ‘சரியான பதில்’ என்பதாக ஒரு ‘கமென்ட்’ போடுவார்கள். குறிப்பிட்ட பிரச்சனையில் குறிப்பிட்ட பதில் சரியானது என்று நீங்கள் கருதுவதால்தானே இப்படி லைக் அல்லது ஓரிரு சொற்களில் கமென்ட் பதிவிடுகிறீர்கள்? அந்தச் சரியான கருத்தை நீங்களே பதிவிடலாமே? இதைச் செய்யாமல், சமூக ஊடகங்களில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்பதில் என்ன பயன்? சரி, இது வேறொரு தலைப்பில் விரிவாகப் பேச வேண்டிய விசயம்.

உண்மையும் வதந்தியும்

எது உண்மைச் செய்தி, எது பொய்ச் செய்தி? சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொள்கின்றன. ஓட்டுநர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். இது வரையில் செய்தி. அதைப் பற்றிய தகவலைப் பரப்புகிற ஒருவர், “இரண்டு பேருந்துகள் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஏராளமானோருக்குப் படுகாயம், மூன்று பேர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்,” என்று, விபத்து நடந்த இடத்தில் நின்ற மூன்றாவது பேருந்தில் இருந்துகொண்டு, கீழே இறங்கிப் பார்க்காமலே, பேசிக்கொண்டிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டுத் தனது ஊகத்தையும் சேர்த்துச் சொல்கிறார். இன்னொருவர் “ஆப்போசிட்ல வந்த டிரைவர் தண்ணியடிச்சிருந்தததாலேதான் இந்த ஆக்சிடென்ட் நடந்திருக்கு,” என்று சேர்க்கிறார். மற்றொருவர், “பயணிகள் பற்றிக் கவலைப்படாமல் இரண்டு டிரைவர்களும் போட்டிபோட்டு ஓட்டினதால விபத்து ஏற்பட்டது,” என்று சேர்க்கிறார். வேறொருவர், “பஸ்சில் ஏறிய காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சண்டை போட்டாங்க, டிரைவர் கவனம் சிதறியது…” என்று சேர்க்கிறார். உங்களுக்கு அந்தச் செய்தி வருகிறபோது, “மாணவர்கள் தகராறில் ஓட்டுநருக்கு அடி, எதிர்ப் பேருந்தின் ஓட்டுநர் மது போதையுடன் வந்ததால் நிதானம் தவறி இரண்டு வண்டிகளும் மோதிக்கொண்டன. பதினைந்து பேர் படுகாயம். நான்கு பேர் உயிர் ஊசல்,” என்பதாக உண்மை விபத்தின் சித்திரம் அடியோடு மாறிப் போயிருக்கும்.

சில நேரங்களில், சில தலைவர்கள் பற்றிய கவலையளிக்கும் வதந்திகள் பரவும். தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞர் பற்றி, அவர் உண்மையாகவே தன் மூச்சை நிறுத்திக்கொள்கிற வரையில், அப்படிப்பட்ட வதந்திகள், சரிபார்த்துக்கொள்கிற முயற்சியே இல்லாமல் பரப்பபப்ட்டிருக்கின்றன. சில நட்சத்திர நடிகர்கள் வேறு ஏதோ காரணத்திற்காக வெளிநாடு சென்றால், கொடிய நோய்க்கு ரகசிய சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அந்தப் பயணம் என்று பரப்பப்பட்டிருக்கிறது.

பொய்ச்செய்தி என்றால் சமூக ஊடகங்களில் பரவுவது மட்டும்தானா? முன்பு ‘பெய்டு நியூஸ்’ பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தனவே? நேரடிப் பணமாகவோ, விளம்பரக் கட்டணங்களாகவோ வேறு வகையிலோ ஆதாயம் பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களுக்கும் பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமான செய்திகளைப் பெரிய ஊடக நிறுவனங்கள் வெளியிடுவதில்லையா? சில நிறுவனங்கள் அல்லது அவற்றின் தலைவர்கள் பயங்கரமாக சமூக சேவைகளில் ஈடுபடுவதாகக் கதைவிடப்பட்டதில்லையா? எத்தனை “கல்வி வள்ளல்களின்” அறப்பணிகள் பற்றியும, அவர்களது அருட்கொடைகள் பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் வந்துள்ளன? அவர்களது கல்வி நிறுவன வளாகங்களுக்குள் மாணவர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவது பற்றிய உண்மைகளைப் பேசாத இப்படிப்பட்ட உபயச் செய்திகளைப் பொய்ச் செய்திப் பட்டியலில் சேர்க்காமல் எதிலே சேர்ப்பது?

அண்மையில் பிரதமர் மோடி பல பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் பொறுப்பாளர்களை அழைத்து விருந்தளித்ததாகச் செய்தி வந்ததே. அரசுக்கு சாதகமான செய்திகளை வெளியிடுமாறு, அரசின் நடவடிக்கைகைளை விமர்சிக்கக்கூடிய செய்திகளைத் தவிர்க்குமாறு அல்லது அடக்கி வாசிக்குமாறு நெருக்கடி தரப்பட்டதாகச் சொல்லப்பட்டதே? சில ஊடக நிறுவனங்களின் செய்தியாக்கங்களில் அது பிரதிபலிக்கவும் செய்கிறதே? இதெல்லாம் என்ன?

போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்ச்செய்தி கசியவிடப்பட்டதை, அதுவும் கதாநாயகர்கள் தரப்பிலிருந்தே செய்யப்பட்டதை ‘மகாபாரதம்’ சொல்கிறதே! அரசியல் மோதல்களில் பொய்களை ஆயுதமாக்கிய கதைகள் பல நாடுகளின் இதிகாசங்களிலும் காவியங்களிலும் கிடைக்கக்கூடும்.

முன்பு தொடங்கிய கிசுகிசு செய்திகள் இன்றுவரையில் தொடர்வதை என்னவென்பது? குறிப்பாகத் திரையுலகம் சார்ந்தவர்கள் பற்றிய அந்தக் கட்டிலறைக் கிசுகிசுக்கள் அவராக இருககுமோ இவராக இருக்குமோ என்ற குறுகுறுப்பையும் மலிவான ரசனையையும் தூண்டுகின்றன. அது பொய்ச்செய்தி இல்லையா? ஆனால், திரையுலகப் பெண்கள் தங்களுக்கு முன்பு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி அண்மையில் ‘மீ டூ’ இயக்கம் தருகிற துணிவோடு வெளிப்படுத்தியபோது, ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்துச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு அவர்களை ஊக்கமிழக்கச் செய்வதற்குப் பல ஊடக நிறுவனங்கள் கூச்சப்படவில்லை. அது அப்படியே சமூக ஊடகங்களிலும் எதிரொலித்தது.

அவநம்பிக்கையும் அவசரமும்

செல்வாக்குள்ள பல ஊடக நிறுவனங்களின் செய்திகள் நம்பகத்தன்மையோடு இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருப்பதும், சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவதற்கு ஒரு காரணம் என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். “ஒரே விசயத்தை அந்த டிவி ஒரு மாதிரி சொல்லுது, இந்த டிவி ஒரு மாதிரி சொல்லுது, காலையில பத்திரிகையைப் பார்த்தா அது வேற மாதிரி சொல்லுது,” என்று பேசப்படுவதைக் கேட்க முடியும். ஆகவேதான், மக்கள் தங்களுடைய கைப்பேசிக்கு சமூக ஊடகங்கள் மூலம், தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வருகிற தகவல்கள் உண்மையானவை என்று நம்புகிறார்கள், அந்த உண்மையைத் தங்களது இதர நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்ற “நல்ல” எண்ணத்தோடு பகிர்கிறார்கள்.

பீபீசி கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் சிலர், எல்லாக் கட்சிகளுமே பொய்ச்செய்தி பரப்புகின்றன என்று பொத்தாம் பொதுவாகக் கூறியிருக்கிறார்கள். இப்படி எல்லோர் மீதும் சகதியடிப்பது ஒரு வழக்கமான நுனிப்புல் மேய்ச்சல் உத்தி. பொய்ச்செய்திகளால் பாதிக்கப்படுகிற கட்சிகள் இருக்கின்றன, பொய்ச்செய்தி பரப்புகிற கட்சிகளின் பணபலத்தோடு போட்டிபோட முடியாத நேர்மையான இயக்கங்கள் இருக்கின்றன. பொய்ச்செய்திகள் ஜனநாயகத்தின் தொழுநோய் என்று அதை எதிர்க்கிற அரசியல் அமைப்புகள் இருக்கின்றன.

இதைத் தடுப்பதற்கு என்ன வழி? கலந்துரையாடலில் அதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தனக்கு வருகிற ஒரு தகவலை, அது யாரிடமிருந்து வந்தாலும், மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன்பாக, அது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம். வேறு யாரிடமாவது விசாரிக்கலாம், பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ அதே போன்ற செய்தி வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ககலாம். தங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடமிருந்து ஒரு தகவல் பகிரப்படுமானால், ஏன், தனது தளத்திற்கு யாரிடமிருந்து அந்தத் தகவல் வந்ததோ அவரையே அழைத்து, “இது நிஜந்தானா” என்று கேட்டுப்பாருங்கள், அவரிடமிருந்து ஆகப்பெரும்பாலும், “தெரியலை, எனக்கு இன்னொருத்தர்ட்டயிருநது வந்துச்சு, உனக்கு ஷேர் பண்ணினேன்,” என்ற பதில்தான் வரும். அந்தப் பதிலிலேயே நமக்குள் எச்சரிக்கைக்கொடியைப் பறக்கிவிட்டு, அந்தத் தகவலை மேற்கொண்டு யாருக்கும் பகிராமல் நிறுத்திக்கொள்ளலாம்.

இன்னொரு நம்பகமான வழியும் இருக்கிறது. ஒரே ஒரு நிறுவனத்தின் செய்தி ஒலிபரப்பை மட்டும் விசுவாசமாகப் பார்த்துக்கொண்டிராமல், ஒரே ஒரு நாளேட்டை மட்டும் நம்பிக்கொண்டிராமல், கூடியவரையில் எல்லாத் தரப்புச் செய்திகளையும் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும். தொடர் நிகழ்வுகள் நமக்கு உண்மைச் செய்திகளைப் பிரித்தெடுக்கும் கலையைக் கற்றுக்கொடுத்துவிடும்.

இதில் அக்கறையுள்ள ஊடக நிறுவனங்களே கூட இதற்கென ஒரு இடம் ஒதுக்கி, சமூக ஊடகங்களில் பொய்யாக வந்தது என்ன, உண்மையில் நடந்தது என்ன என இரண்டையும் தினமும் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரலாம். அரசியல், ஆன்மீகம், சந்தை, சமூகம், கலைத்துறை என எது பற்றிய பொய்ச்செய்திகளையும் இப்படி அம்பலப்படுத்தலாம். அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை நிறுவுவதற்கும் உதவி செய்யும், பெருமளவுக்கு உண்மைச்செய்திகள் பரவுவதையும் உறுதிப்படுத்தும்.