டில்லி

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாநிலங்கள் அவை போலி அடையாள அட்டை சிக்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மேல் வழக்கு பதிவானது.

இதில் இடைத்தரகராக இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.

அவரிடமிருந்து போலி மக்களவை அடையாள அட்டை கைப்பற்றப் பட்டுள்ளது.

ஏற்கனவே லஞ்சக் குற்றத்துக்கு ஆதாரம் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து போலி அடையாள அட்டை சிக்கியது அவரை மேலும் ஒரு குற்றத்தில் இணைக்க வசதி செய்துள்ளது.

போலி அடையாள அட்டை வைத்திருப்பது இ பி கோ 467 ஆவது சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும்.

இந்த சட்டம் மூலம் மோசடிக் குற்றத்தின் கீழ் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

இந்த போலி அடையாள அட்டை அச்சு அசலாக ஒரிஜினல் போலவே உள்ளதால், இதன் மூலம் பாராளுமன்ற வளாகத்தினுள் சட்ட விரோதமாக சுகேஷ் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அல்லது வேறு யாரேனும் உபயோகப் படுத்த இந்த அட்டை சுகேஷ் உருவாக்கினாரா என்கின்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில் தினகரன் ஜாமீனில் வெளியே இருப்பது தெரிந்ததே.