பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ரூ, 2000 கள்ள நோட்டு : அதிர்ச்சித் தகவல்

டில்லி

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 2000 கள்ள நோட்டுக்கள் ரூ. 900க்கு விற்கப்படுவதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

கள்ள நோட்டுகள் புழக்க்கத்தை தடுக்க பழைய ரூ. 1000 மற்றும் ரூ. 500 செல்லாதவைகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.   புதிய ரு. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தன.  இந்த நோட்டுக்கள் யாராலும் போலியாக அச்சடிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.  ஆயினும் ரூ. 2000 கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கிழக்கு டில்லியில் உள்ள ஆனந்த விகார் பகுதியில் கள்ள நோட்டுக்கள் பரிமாற்றம் நடக்க இருப்பதாக டில்லி சிறப்புப் படை போலிசாருக்கு ஒரு இன்ஃபார்மரிடம் இருந்து தகவல்கள் வந்தன.   இதைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 16ஆம் தேதி அந்தப் பகுதியை கண்காணித்து வந்தனர்.

அந்த சோதனையில் ஒரு நபர் பிடிபட்டுள்ளார்.    அவரிடம் ரூ. 2000 நோட்டுக்கள் கட்டு கட்டாக கிடைத்துள்ளன.    அவரை விசாரிக்கையில் அவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்த காஷித் என தெரிய வந்துள்ளது.   54 வயதான காஷித் இந்த நோட்டுக்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்து வருவதாகவும் ரூ.900 வீதம் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.