திருப்பதி சாமி தரிசனத்தில் போலி டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம் சேவையில் போலி டிக்கெட்டுகள் உலவியது அம்பலமாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவையுடன் சுவாமியை துயில் எழுப்புவது வழக்கமாகும். ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் நடைபெறும் சேவைகளில் முதல் சேவையான இந்த  சுப்ரபாத சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தத் தரிசனத்திற்காக இன்று காலை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர்.  அந்த பக்தர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருந்த ஊழியர்கள் சோதனை செய்தனர்

இச்சோதனையில் மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அந்த நான்கு  பக்தர்கள் கொண்டுவந்த டிக்கெட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் இந்த டிக்கெட்டுகளை  தாங்கள் வாங்கியதாகவும் ஒரு டிக்கெட் ரூ4 ஆயிரம் கொடுத்ததாகவும்  அவர்கள்  தெரிவித்தனர்.

இதையடுத்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பும் பலமுறை போலி டிக்கெட்டுகள் உலவியதும் அதை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

<p>ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை டிக்கெட் பொது கோட்டாவில் ரூ 120க்கும் விற்கப்பட்டு வரும் நிலையில் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கப்படும் கோட்டாவில் ரூ 220 விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ 4 ஆயிரத்திற்கு இந்த டிக்கெட்டுகளை போலியாக தயார் செய்து விற்பனை செய்த மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பிரபாகரனை கைது செய்வதற்காக போலீசார் மூலம் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைபோன்று பிரபாகர் எத்தனை பேருக்கு போலி டிக்கெட் வழங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.