குஜராத் பாஜக அரசை திணறடிக்கும் ‘போலி’ வென்டிலேட்டர்கள்… ஆட்டம் காணும் ரூபானியின் பதவி…

--

அகமதாபாத்:

குஜராத் பாஜக அரசு வாங்கிய வென்டிலேட்டர் விவகாரம், அங்கு மாநில அரசை திணறடித்து வருகிறது. இதன் காரணமாக மாநில முதல்வர் விஜயரூபானியின் முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும், வென்டிலேட்டர் விவகாரத்தில் குஜராத் மாநில பாஜக அரசு, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் மாநில முதல்வராக விஜய் ரூபானி இருந்து வருகிறார். இங்கும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க வாங்கப்பட்ட வென்டிலேட்டர்களில் ஏராளமான பிரச்சினைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கு வென்டிலேட்டர் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்துக்கு தேவையான வென்டிலேட்டர்களை வாங்க, முதல்வர் ரூபானி ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட, தனது நண்பரின் தனியார் நிறுவனத்தை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக  ஏப்ரல் 4 ஆம் தேதி   கொரோனா பாதிப்புக்குள்ளான நகரமான அகமதாபாத்தை பார்வையிட்டதைத் தொடர்ந்து,  அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு ராஜ்கோட் நிறுவனம் தானமாக வழங்கிய வென்டிலேட்டர்களை  முதல்வர்  ரூபானி  திறந்து வைத்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கோவிட் -19’ தொற்றுநோயின் தற்போதைய சூழ்நிலையில், முழு உலகமும் போதுமான அளவு வென்டிலேட்டர்கள் கிடைப்பதில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது,  எனவே, இந்த (ராஜ்கோட் தயாரிப்பு) மலிவான வென்டிலேட்டரை  வாங்குவதன் மூலம் குஜராத் கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகில் ஒரு பாதையை உடைக்கும், தலைவராக மாறும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பிலும்,   “ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஜோதி சிஎன்சி வென்டிலேட்டரான ‘தமன் -1 ’ஐ மிகக் குறுகிய காலத்தில் வெறும் 10 நாட்களில் உருவாக்கியது.

‘தமன் -1’ உற்பத்தி செலவு ஒன்று இயந்திரத்துக்கு ரூ .1 லட்சத்துக்கும் குறைவு. இந்த மகத்தான சாதனை பிரதமர் திரு நரேந்திரபாய் மோடியின் கனவு பிரச்சாரமான ‘மேக் இன் இந்தியா’வுக்கு ஒரு புதிய மகுத்தை சேர்க்கும்.”

 ராஜ்கோட்டை தளமாகக் கொண்ட உள்ளூர் தொழிலதிபர் திரு. பரக்ராம்சிங் ஜடேஜா மற்றும் அவரது ஜோதி சிஎன்சி குழு, ‘மேக் இன் இந்தியா, மேக் இன் குஜராத்’ பிரச்சாரத்தின் நோக்கத்திற்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், முதல்வர் ரூபானியும், படேலும்  வென்டிலேட்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாள ரான பராக்கிராம்சிங் ஜடேஜா மற்றும் அவரது குழுவினரின்,  சிறந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினர்.

ஆனால், ராஜ்கோட் நிறுவனம் தயாரித்த வென்டிலேட்டர் தரமானதாக இல்லை என்று குற்றச்சாட் டுக்கள் எழுந்துள்ளன. ரூபானியின் நண்பர் நன்கொடையாக  சிவில் மருத்துவமனைகளுக்கு வழங்கிய வென்டிலேட்டர்கள், சரியான முடிவுகளை தெரிவிக்கவில்லை என்றும், அதில் பழுது இருப்பதாகவும் மருத்துவர்களும், சுகாதாரத்துறையினரும் குற்றம் சாட்டி உள்ளனர். இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இதுகுறித்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், இது ஒரு தீவிரமான விஷயம். ஒரு மாநில முதல்வர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க பரிந்துரைள்ள செயல் குற்றவியல் நடவடிக்கை. இது குஜராத் அரசாங்கம்  எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அஞ்சலி ரூபானி ஆகியோர் அரசு  செலவில் ராஜ்கோட் நிறுவனத்தை  எவ்வாறு விளம்பரப்படுத்தி வருகிறார்கள் என்பதைஅவர்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என்று விமர்சித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  குஜராத்தின் மிகப்பெரிய கொரோனா தொற்று  மருத்துவமனை நிர்வாகம்,  அவசரம், அவசரமாக மத்திய அரசிடம் இருந்து, தங்களு தேவையான வென்டிலேட்டர்களை உடனே அனுப்பி வைக்க வலியுறுத்தி உள்ளது.

கொரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், ராஜ்கோட் நிறுவனத்தின்  இயந்திரங்களின் திறமையின்மை குறித்து,  அகமதாபாத் சிவில் மருத்துவர்கள்  மாநில அரசுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்.

இந்த கருவி,  வென்டிலேட்டரே அல்ல, இது இயந்திரமயமாக்கப்பட்ட  ஒரு கருவி என மூத்த  மருத்துவ அதிகாரி கடுமையாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும், அவர்கள் தங்களது மேம்பட்ட தயாரிப்பை நிரூபிக்க மருத்துவ மனைக்கு வருவார்கள் என்று  எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையின் மற்ற மருததுவர்களும்,  இவை ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் அல்ல என்று  தெரிவித்திருப்பதுடன், தற்போதைய நிலையில், நோயாளிகளின்  தீவிர நிலைமைகளில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதாக எழுந்ததைத் தொடர்ந்து,  வென்டிலேட்டர் விவகாரத்தில் முதல்வருக்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகளை மத்தியஅரசு அதிரடியாக மாற்றியது.

மாநில  முதல்வருக்கு தகவல் தெரிவிக்காமல், மத்தியஅரசு,  அகமதாபாத் கலெக்டர் விக்ராந்த் பாண்டேவை  அதிரடியாக நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றியது. மேலும்,  அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா ஊரக வளர்ச்சி ஆணையராக மாற்றப்பட்டார். இவர்கள் இருவருக்கும், ராஜ்கோட் வென்டிலேட்டர் தயாரிப்பு  நிறுவனத்துடன் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  மாநில முதல்வர் ரூபானியின் நண்பர் நிறுவன தயாரிப்பு வென்டிலேட்டரை, வெளியேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இது குஜராத் மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் வென்டிலேட்டர் குறித்து ஊடகங்களுக்கு விளக்க்ம அளித்துள்ள,  தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், முதல்வரின் நண்பருமான, பராக்கிராம்சிங் ஜடேஜா, இது ஒரு முழுமையான வென்டிலேட்டர் அல்ல, அது முன்கூட்டியே அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

வென்டிலேட்டரில் பல முறைகள் உள்ளன,  இது அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதாகும்.  “தற்போது தமன் -1 இல்,  நாம் பொதுவாக பயன்படுத்தும் வென்டிலேட்டர்களைக் காட்டிலும் அதிக ஆக்ஸிஜனைக் கொடுக்க வேண்டும். எனவே, நாம் இதை வென்டிலேட்டராகப் பயன்படுத்த முடியாது, ஆனால் பின்னர் நோயாளிகளுக்கு சரியான வென்டிலேட்டரில் வைப்பதற்கு முன்பு அதை இடைக்கால நடவடிக்கையாகப் பயன்படுத்தலாம்.

நாங்கள் முழு அளவிலான வென்டிலேட்டரான தமன் -3 ஐ உருவாக்கி வருகிறோம்.  இருநதாலும், நாங்கள் வழங்கிய அனைத்து வென்டிலேட்டர்களையும் மேம்படுத்த அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளோம் என்றும் தங்களது நிறுவன தயாரிப்புகள் குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து,  குஜராத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு உடடினயாக தேவைப்படும் மொத்த 1,500 வென்டிலேட்டர்களில்,   அவசர தேவையின்  அடிப்படையில் 300 புதிய முழு அளவிலான வென்டிலேட்டர்ளை அனுப்ப மாநில அரசு  மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வென்டிலேட்டர் விவகாரம் குஜராத் மாநில முதல்வரின் தூக்கத்தை தொலைத்துள்ளது. ஏற்கனவே அங்கு அரசியல் குடுமிபிடி சண்டை நீடித்து வரும் நிலையில், வென்டிலேட்டர் விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ளதால் ரூபாயின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.