நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும்.

ன்றி : ராஜகோபால் சுப்பிரமணியம்.
*******************************************************

பொய்: நீட் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.

உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் (Plenary legislation ) கிடையாது. காங்கிரசையோ அல்லது அப்போது அங்கம் வகித்த திமுகவையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களையோ குற்றம் சொல்வதற்கு. மாறாக, இந்திய மருத்துவ கவுன்சில் 2௦1௦-ல் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் (Regulations). மருத்துவ கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. உதாரணத்திற்கு தேர்தல் கமிஷன், CAG போல. மத்திய அரசு செல்வாக்கு செலுத்த முடியும் என்றாலும் முழுக்க முழுக்க அதிகாரத்தில் உள்ளவர்களால் முடிவெடுக்கப்படுவது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே எப்படி CAG தலைவர் வினோத் ராய் எப்படி 2-g இழப்பை வெளியிட்டார். சேஷன் எப்படி தேர்தல் ஆணையாளராக இருந்த போது ஆளுங்கட்சிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டினார். அதே போல தான் மருத்துவ கவுன்சில் தனது அதிகாரத்திற்குட்பட்டு இயற்றிய விதிகள். இதற்கும் ஆட்சிக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.

பொய்: மருத்துவ கவுன்சில் 2௦1௦-ம் ஆண்டே பாடத்திட்டத்தை வெளியிட்டு விட்டது. நாம் தான் பாடத்திட்டத்தை மேம்படுத்தவில்லை.

உண்மை: 2௦1௦-ம் ஆண்டே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவ கவுன்சில் நீட் விதிமுறைகளை அறிவித்த உடனேயே தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கி விட்டன. ஒன்றல்ல, இரண்டல்ல 115 வழக்குகள் நீட் விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. பிறகு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்க்கும் ஒரு மாநிலம், நீதிமன்றத்தின் மூலம் தற்காலிக நிவாரணம் பெற்ற ஒரு மாநிலம், நிரந்தர தீர்வை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மூலம் எதிர்பார்த்திருக்கும் ஒரு மாநிலம் எதற்காக வெறும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பின் பாடத்திட்டத்தை ஏற்று மாற்ற வேண்டும்? பிறகு 2௦13-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச்சட்டத்திற்கே விரோதமானது என்று இறுதித் தீர்ப்பும் வழங்கி தமிழ்நாட்டிற்கு நியாயம் வழங்கி விட்டது. பிறகு எதற்கு 2௦1௦-ம் ஆண்டு மருத்துவ கவுன்சில் பூசாரிகள் நீட் வேண்டும் என்று பாடத்திட்டத்தை அறிவித்தவுடன் என்றவுடன் ஒரு மாநிலம் கிடுகிடுவென்று நடுங்கி பாடத்திட்டத்தை மாற்ற வேண்டுமா?

பொய்: நீட் தேர்வு சட்டத்தின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நடத்தப்படுகிறது. எனவே நாம் மதிக்க வேண்டும்.

உண்மை: 2௦13-ம் ஆண்டிலேயே மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்து விட்டது. இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளிக்கிறார். பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்த தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்று விடுகிறார். பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டு இறுதியாக இதே போன்ற பிரச்சினையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருப்பதால் இந்த சீராய்வு மனுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அந்த அரசமைப்புச்சட்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது.

அந்த அரசமைப்புச்சட்ட அமர்வு சீராய்வு மனுவினை சீராய்வு மனுக்களை விசாரிக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கே எதிராக ஏப்ரல் 11, 2௦16-ல் மனுவினை அனுமதித்து 2௦13 தீர்ப்பினை திரும்ப பெற்று புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. [இந்த ஐந்து நீதிபதிகளுள் நமது மாநிலத்தை சேர்ந்த மாண்புமிகு பானுமதியும் ஒருவர்!] அந்த புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவேயில்லை. ஒரே வேளை புதிய அமர்வு திரும்பவும் விரிவாக விவாதித்து நீட் தேவையில்லை என்று தீர்ப்பளித்தால் இது வரை நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அனிதாவின் படுகொலைக்கும் யார் பொறுப்பேற்பது?

ஏப்ரல் 11, 2௦16-ல் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட உடனேயே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்கிறது. இருபது நாட்களுக்குள்ளாகவே உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28, 2016-ம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. நன்றாக கவனியுங்கள். தலைமை நீதிபதி அமர்வில் 115 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் விரிவாக வாதம் செய்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பை அதில் முரண்பட்டு தீர்ப்பளித்த ஒருவரே மூத்த நீதிபதியாக இருந்து அதை திரும்ப பெறுகிறார்! எவ்வளவு நியாயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே, 2௦13-ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைபுற வழியாக 2௦16-ஆம் ஆண்டு உயிர்பெற்று வருகிறது. பிறகு ஜெயலலிதாவின் அழுத்தத்தால் அந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பொய்: நீட் தேர்வு விதிவிலக்கு சட்டத்திற்கு அனுமதி மறுத்தது உச்ச நீதிமன்றம் தான். பாஜக அரசிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

உண்மை: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இது தான். நாம் நிரந்தர விதிவிலக்கு கேட்டு அனுப்பிய சட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. காரணம் பாஜக அரசு. அந்த சட்டத்திற்கு அப்போதே குடியரசுத்தலைவர் அனுமதி அளித்திருந்தால் உச்ச நீதிமன்றம் ஒன்றுமே செய்திருக்க முடியாது. பிறகு நிர்மலா சீதாராமனின் ஒரு வருட விதிவிலக்கு கோரினால் பரிசீலிப்போம் என்று சொல்லி அதற்கு அட்டர்னி ஜெனரல் சம்மதித்து மூன்று அமைச்சகங்கள் சம்மதித்த பிறகும் பிற அமைச்சகங்களின் அழுத்தத்தால் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டை அடுத்தே உச்ச நீதிமன்றம் நளினி சிதம்பரத்தின் மனுவை அனுமதித்து நீட் தேர்வின் படி கவுன்சிலிங்கை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. எனவே, முழுக்க முழுக்க நீட் நம் மீது திணிக்கப்பட்டதற்கு பாஜகவும் நமது கையாலாகாத அரசும் தான் காரணம்.

பொய்: மாநில அரசு கல்வித்தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் தேர்விற்கு பயப்படத்தேவையில்லை.

உண்மை: எத்தனை பேர் சிபிஎஸ்ஈ-ல் படித்த மாணவர்கள் கோச்சிங் செல்லாமல் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை சொல்லுங்கள். பிரச்சினை சிபிஎஸ்ஈ யா மாநிலப் பாடத்திட்டமா என்பது கிடையாது. இங்கு நடந்து கொண்டிருப்பது காசிருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம். காசிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு இல்லாதவர்களை தரம் தரம் என்று மட்டம் தட்டுவது அயோக்கியத்தனம். நீட் தேர்வில் தகுதி 5௦% (percentile) தேர்ச்சி பெற்றிருந்தாலே ஒரு பணக்கார மாணவன் தனியார் மருத்துவ கல்லுரியில் காசு கட்டி மருத்துவராக முடியும். 5௦% மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து 199 வாங்குபவர்கள் தரமில்லாதவர்கள் என்று சொல்வதற்கு சமூக விரோதியாக இருந்தால் மட்டுமே முடியும்.