குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம்.
இந்த கொரோனா ஊரடங்கு சில பல அசௌகரியங்களை கொடுத்திருப்பது என்னவோ நிஜம் தான்.  ஆனால் நமக்கே தெரியாமல் நமது பண்டைய வாழ்வியலையும் அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டி நமக்கு நினைவூட்டவும் தவறவில்லை.
ஆம். பணி நிமித்தம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பிரிந்து கிடந்த நிறைய குடும்பங்களை ஒன்றாக்கி கூட்டுக்குடும்பத்தின் பயனையும், அவசியத்தையும் அனைவருக்குமே உணர்த்தியுள்ளது இந்த ஊரடங்கு.
“என் பொண்ணு வீட்டுக்கு எதேச்சையாக வந்திருந்தேன்.  திடீர்னு இந்த ஊரடங்கை அமல்படுத்தவும், சரி தனியாக அங்க போய் என்ன செய்யப்போறோம்னு இங்கேயே தங்கிட்டேன்” என்கிறார் ரூபா மகேந்திரன்.
 வாரம் ஒரு தடவை வந்து போவாங்க அம்மா.  ஆனா இப்போ இத்தனை நாளா இங்கேயே தங்கிட்டதால என் குழந்தைகளுக்கு ஒரே சந்தோசம்.  இப்போ அவங்க பாட்டியோட ஒரே லூட்டி தான்” என்று மகிழ்கிறார் அவர் பெண் ப்ரீத்தி இந்தர்.
சகுந்தலா அன்புகுமார், “பெரம்பூரில் தனியாக வசித்துவரும் நான் இந்த ஊரடங்கின் போது என் மகள் வீட்டிற்கு வந்து விட்டேன்.  தனியாளாக என்னால் சமாளித்திருக்கவே முடியாது” என்கிறார். இப்போது இவருக்குத் தேவையான அனைத்தையும் இவரது பேரப்பிள்ளைகளே செய்து வருகின்றனர் என்பது இவருக்கு மிகவும் மகிழ்வான விசயம்.
வெளி மாநிலம், மாவட்டம் என்று பணி நிமித்தமாகச் சென்றுவிட்ட சில இளைஞர்கள் இந்த நேரத்தில் தங்களது பெற்றோரைத் தேடி வந்துவிட்டனர்.  “ஊரடங்கிற்கு முந்தின தினம் சென்னை வந்த நான், சூழலை பார்த்து இப்போ இங்கேயே தங்கிட்டேன்.  இப்போ நான் இங்க இருக்குறதால என் வயசான பெற்றோரையும், கூடவே தன் குழந்தையோட இருக்கிற அக்காவையும் பாத்துக்க முடியுது.  காய்கறி வாங்கிறதிலிருந்து வெளி வேலைகள் எல்லாமே நானே பாத்துக்கிறேன்.  இல்லன்னா இவங்க ரொம்ப சிரமப்பட்டிருப்பாங்க” என்கிறார் கர்நாடகா ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் பண்ணும் 23 வயது பாரதி.
ஆக, பெரும்பாலான பிள்ளைகளுக்கு இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெற்றோரைத் தனித்து விட மனமில்லாமல், ஒன்று தங்களுடன் அழைத்துக்கொண்டு விட்டனர். அல்லது இவர்கள் சென்று பெற்றோருடன் தங்கி வருகின்றனர்.  இதில் மிகப்பெரிய அனுகூலமாகப் பார்க்கப்படுவது பெரியவர்களின் உடனான குடும்ப பிணைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதனை இன்றைய  இளைய தலைமுறையினர் உணர தொடங்கியிருப்பது தான்.  மேலும் பெரியவர்களுக்கும் தங்களது தனிமை கொடுமையிலிருந்து கிடைத்த இந்த விடுதலை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
– லட்சுமி பிரியா