பிச்சை கோலத்தில் பெண்…  விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்…

ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அப்பகுதியில் குப்பைத் தொட்டியின் அருகே கிழிந்த உடையணிந்த பெண் ஒருவர் படுத்திருந்ததைப் பார்த்துள்ளார் இன்ஸ்பெக்டர்.

அவரை எழுப்பி விசாரித்த போது அவர் பெயர் நேமிஸ் பாரதி என்பதும், அவர் ஒரு அனாதை என்பதும் தெரிய வந்துள்ளது.   இன்ஸ்பெக்டருக்கு அவரின் நிலைமை புரிந்தது.  உடனே பெண் காவலர்கள் உதவியோடு அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார் இன்ஸ்பெக்டர்.  பின்னர் அந்தப் பெண்ணை குளிக்க வைத்து, உணவு வழங்கி புதிய உடைகள் அணிவித்து விசாரித்த போது தான் அவரின் பின்னணி தெரிய வந்துள்ளது.

அவரின் தந்தை சென்னை சாஸ்திரி பவனில் வேலை பார்த்துள்ளார்.  பாரதி பிஎஸ்ஸி கெமிஸ்டரி படித்துள்ளார். அவருக்குப் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவர் மீது காதலாம்.  அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக் கழித்து வந்துள்ளார்.  இவருடைய சகோதரியோ இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரைக் காதலித்து, அந்த வீரருக்கு நிச்சயம் நடந்ததும், அந்த வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலையே செய்து கொண்டாராம்.  அந்த சோகத்திலேயே இவர்களது தந்தையும் இறந்து விட்டார்.   இந்தப்பெண் பாரதி 2006-ல் அந்த நடிகரைத் திருமணம் செய்யும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி இப்படி பைத்தியம் போலத் தெருவில் சுற்றித்திரிந்துள்ளார்.

பாரதியிடம் அவரின் உறவினர்கள் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவரின் அத்தை வீடு, இன்னொரு சகோதரி விடு ஆகியோரின் வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார் இன்ஸ்பெக்டர்.  ஆனால் அவர்கள் யாரும் இவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.  வேறு வழியின்றி இப்பெண்ணைத் தனியார் காப்பகங்களில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் தனியார் காப்பகங்களில், கொரோனா காரணமாக யாரையும் நாங்கள் சேர்ப்பதில்லை என்று கூறிவிட்டனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தலைமைக் காவலர் குமரன், காவலர்கள் ஜான் மேனகா, சத்யா, பினோ ஜான் ஆகியோர் பல்வேறு காப்பகங்களில் பாரதியைச் சேர்த்துவிட முயற்சி செய்ததில், ஒரு வழியாகச் சென்னை மாநகராட்சி காப்பகத்தில் பாரதியைச் சேர்த்துக்கொள்ள அனுமதி கிடைத்தது.  எனவே பாரதி அங்குச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகு பாரதிக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஒரு பெண்ணின் சினிமா நடிகரின் மீதான மோகம் ஒரு குடும்பத்தையே சீரழித்து விட்டது பெரும் வேதனையான விசயம்.

– லெட்சுமி பிரியா