விநாயகர் சதுர்த்திக்காக தானே பிள்ளையார் சிலை செய்யும் பிரபல நடிகர்

விநாயகர் சதுர்த்தியான இன்று, வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை வாங்குவது நம் வழக்கம். ஆனால் நடிகரும், இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் தன் வீட்டில் வழிபட, தானே விநாயகர் சிலை செய்வது வழக்கம். இந்த வருடமும் தன் மகன் பிரேம ராஜனுடன் விநாயகரை செய்யும் காட்சிகளைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

இது குறித்து பாண்டியராஜனிடம் கேட்டபோது, “விநாயகர் என் இஷ்ட தெய்வம். ஏதாவது மன சங்கடம் என்றால் “அப்பா.. விநாயகா.. நல்ல வழி காட்டப்பா” என்று மனமுருகி வேண்டுவேன். சூரியனைக் கண்ட பனி போல என்பார்களே… அதுபோல பிரச்சினைகளை விலகிவிடும்.

ஒவ்வொரு விநாயகசதுர்த்தியையும் குடும்பத்தினரோடு விமர்சையாக கொண்டாடுவேன். அதற்காக விநாயகர் சிலையையும் நானே செய்வேன். இந்த வருடம் மகன் பிரேமராஜனுடன் சேர்ந்து செய்தேன். மனதுக்கு இதமாக,மகிழ்வாக இருக்கிறது” என்றார் உற்சாகத்துடன்.