அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் யூசுப் பதான் ஓய்வு

மும்பை

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியில் விளையாடத் துவங்கினார்.  அதன் பிறகு இந்தியாவுக்கான டி 20 போட்டிகளில் 20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 236 ரன்கள் எடுத்துள்ளார்.

தவிர அவர் 57 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடி 810 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். மூன்று முறை அரை சதம் எடுத்துள்ளார்.  அவரது அதிகபட்ச ஸ்கோர் 123 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐபிஎல் தொடரில் 174 போட்டிகளில் விளையாடிய யூசுப் பதான் மொத்தம் 3204 ரன்கள் எடுத்துள்ளார்.  இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ஆவார்.

யூசுப் பதான் தற்போது டிவிட்டரில் தாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதானின் சகோதரர் யூசுப் பதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.