பிரபல விஞ்ஞானிக்கு அரசு பதவி

டில்லி

பிரபல விஞ்ஞானி சதீஷ் ரெட்டி பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு தேவையான ஆயுதங்கள் பற்றிய அராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கவனித்து வருகிறது.   இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த கிறிஸ்டோபரின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 29 ஆம் தேதியுடன் நிறைவு அடைந்தது.

தற்போது இந்த பதவியில் பிரபல விஞ்ஞானி ஜி. சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.   இவர் ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஆலோசகராக பணி புரிந்து வருபவர் ஆவார்.   இவர் அத்துடன் அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம் பாட்டுத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.    பாதுகாப்புத் துறையின் மிக உயரிய பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1963 ஆம் ஆண்டு பிறந்த சதீஷ் ரெட்டி விண்வெளி விஞ்ஞானி ஆவார்.  இவர் இதற்கு முன்பு டாக்டர் அப்துல்கலாம் ஏவுகணை இயக்ககத்தில் இயக்குனராக பணி புரிந்தவர்.    இந்திய ஏவுகணைகள் பலவற்றை வடிவமைப்பதில் பணி புரிந்தவர்.  முக்கியமாக அக்னி 5 ஏவுகணை தயாரிப்பில் இவரது பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.