நடிகர் ரஜினியுடன் பிரபல பத்திரிகையாளர் மாலன் சந்திப்பு

டிகர் ரஜினிகாந்தை பிரபல பத்திரிகையாளர் மாலன் இன்று சந்தத்து உரையாடினார்.

அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் கடந்த (2017ம்) வருடம் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி துவங்கி தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இது அவரது  ரசிகர் மன்ற மட்டத்திலும் ஊடகங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ரசிகர்கள்  உற்சாகமடைந்தனர். ஊடகங்களில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்தன.

ஆனால் கட்சி துவங்கப்போவதாக கூறி ஒருவருடம் நெருங்கும் நிலையில் இதுவரை கட்சி பெயரை ரஜினி அறிவிக்கவில்லை. முக்கியமான பல நிகழ்வுகள் குறித்து கருத்து கூறுவதும் இல்லை.

அதே நேரம் சில நிகழ்வுகள் குறித்து ரஜினி கருத்து தெரிவிப்பதும் அது சர்ச்சையாவதும் நடந்தது. இதற்கிடையே   காலா, 2.o ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்து அவர் நடித்திருக்கும் பேட்ட படம் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே அவ்வப்போது அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை ரஜினி தனது போயஸ் இல்லத்தக்கு அழைத்து சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில் இன்று பிரபல பத்திரிகையாளர் மாலனை தனது போயஸ் இல்லத்துக்கு அழைத்து ரஜினி சந்தித்தார். இது  குறித்து மாலன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“இன்று திரு.ரஜனிகாந்தை சந்தித்தேன்.

அரசியல் பேசவில்லை. சிங்க்ப்பூர் பற்றி, லீ குவான் யூ பற்றி நிறைய பேசினோம். மின் ஆளுகை, ரொக்கம் தவிர்த்த பணப்பரிவர்த்தனை போன்றவை குறித்து பேசினோம். அவருக்கு என்னுடைய, “வீழ்வேன் என்று நினைத்தாயோ” நூலைப் பரிசளித்தேன்
இனிமையான மனிதர். ஆரோக்கியமான சந்திப்பு
புகைப்படங்களுக்கு நன்றி: ரமேஷ்” என்று மாலன் பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் மாலன் ரஜினியின் ஆதரவாளராக அறியப்படுபவர் என்பதும், “கமலின் ஆஃபீஸ்பேரர் ஸ்ரீப்ரியா டான்ஸ் ஆடுவாரா” என்று முகநூலில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.