மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்த வேண்டும் : பிரபல இஸ்லாமிய பாடலாசிரியர்

மும்பை

பிரபல இந்திப்பட பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.

மசூதிகளில் தினமும் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்க ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்றனர்.  இதை உருதுவில் அஜன் எனவும் தமிழில் பாங்கு எனவும் அழைக்கின்றனர்.  இவ்வாறு தினசரி ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்குப் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.  இது குறித்துக் கடந்த  2017 ஆம் ஆண்டு பிரபல பாடகர் சோனு நிகம் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை எதிர்த்து டிவிட் செய்தார்.

அப்போது சோனு நிகம், “ நான் ஒரு இஸ்லாமியன் இல்லை எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டால் அஜன் குறித்த அழைப்புடன் எழுந்திருக்க வேண்டி உள்ளது.  இது எப்போது இந்தியாவில் முடிவடையும் எனத் தெரியவில்லை.  எந்த ஒரு கோவில், குருத்வாரா உள்ளிட்ட எங்குமே இந்த பயன்பாட்டை நான் ஆதரிப்பதில்லை” என டிவீட் செய்திருந்தார்.

இது குறித்து பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், “சோனு நிகம் தெரிவித்த கருத்தான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன்.  அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் உள்ள எந்த வழிபாட்டு தலத்திலும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.” எனப் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜாவேத் அக்தர் சனிக்கிழமை இரவு வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில்,. ”கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கு அழைப்பது பாவமாகக் கருதப்பட்டது.  அதன் பிறகு அது இஸ்லாமிய வழக்கம் ஆகி விட்டது.  இனி அது முடிவுக்கு வரவேண்டும்.   தொழுகைக்கு அழைப்பதில் பிரச்சினை இல்லை.  ஆனால் ஒலிபெருக்கியின் ஓசை பலருக்குச் சிரமம் அளிக்கிறது.   இந்த முறையாவது அவர்கள் இதை செய்வார்கள் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பலவித விமர்சனங்கள் எழுந்துள்ளன.  ஒருவர் இந்துக் கோவில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்து ஜாவேத் அக்தரிடம் கேள்விகள் எழுப்பி உள்ளார்

அதற்கு ஜாவேத் அக்தர், “அது கோவிலோ மசூதியோ திருவிழா காலங்களில் மட்டும் ஒலிபெருக்கி பயன்படுத்துவது நல்லதாகும். ஆனால் தினமும் கோவில்களிலோ மசூதிகளிலோ பயன்படுத்த கூடாது.  ஆயிரம் வருடங்களுக்கு மேல் தொழுகை அழைப்பு ஒலிபெருக்கி இல்லாமலேயே விடுக்கப்பட்டது.  தொழுகை அழைப்பு என்பது நமது நம்பிக்கை.  ஆனால் ஒலிபெருக்கி நம்பிக்கை இல்லை” என அதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே ஜாவேத் அக்தர் கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் மசூதிகளை மூடுவதற்கும்  மெக்கா மதினாவை மூடியதற்கும் ஆதரவு தெரிவித்டுள்ளார்.  அத்துடன் ரம்ஜான் மாத தொழுகையை இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்து செய்யலாம் னவும் அவ்ர் தெரிவித்துள்ள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.