லிஃபோர்னியா

லிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஈரானை சேர்ந்த மரியம் மிர்ஸாக்கனி புற்று நோயால் மரணம் அடைந்தார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த கணித மேதை மரியம் மிர்ஸாக்கனி (வயது 40).  இவர் கணிதத்தின் நோபல் பரிசு என கருதப்படும் ஃபீல்ட்ஸ் மெடல் பரிசு பெற்றவர்.  இதுவரை பரிசு பெற்றவர்களில் ஒரே பெண் இவர்தான்.  இவர் தனது பள்ளி நாட்களிலேயே சர்வதேச கணிதப் போட்டியில் முதல் பெண்ணாக கலந்துக் கொண்ட பெருமை பெற்றவர். இவர் நேற்று மார்பகப் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார்.

மரணமடைந்த மரியம், பல கடினமான கணக்குகளுக்கு மிகச் சுலபமாக விடை கண்டுபிடித்துள்ளவர்.  தற்போது கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார்.

மரியம் ஈரானில் தனது பள்ளி நாட்களின் போது சர்வதேச கணிதப் போட்டியில் 1994 ஆம் ஆண்டு கலந்துக் கொண்டு பரிசு பெற்றதில் இருந்தே கணித மேதைகள் மத்தியில் இவர் புகழ் பரவத் தொடங்கியது.   இவர் டெஹ்ரானில் உள்ள ஷரிஃப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.  பின் அவர் மெல்படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடந்தார்.  அங்கு இவருக்கு ஆசிரியராக இருந்தவர் கர்டிஸ் மேக்மில்லன்.  இவரும் ஃபீல்ட்ஸ் விருதை வென்றவர்.

சமீபத்தில் அவர் உலகில் யாராலும் விடை கண்டுபிடிக்க முடியாத ஒரு கணக்குக்கு விடையை கண்டு பிடித்தமைக்காக கணித மேதைகள் பலரும் இவரை ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என புகழாரம் சூட்டினர்.   தற்போது இவர் மறைவு குறித்து பல கணித மேதைகளும், பேராசிரியரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

மரியம் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இணையும் முன், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், கிளே மேக்ஸ் இன்ஸ்டிடியூட்டிலும் பணி புரிந்து பலரின் பாராட்டைப் பெற்றவர்.

இவருக்கு ஜான் வாண்டெரெக் என்பவருடன் திருமணமாகி அனாகிதா என்னும் ஒரு மகள் உள்ளார்.