பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ மரணம் : நெட்டிசன் இரங்கல்

சென்னை

கொரோனா பாதிப்பால் பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ இன்று உயிர் இழந்தார்.

பிரபல பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு நெட்டிசன் குணா குணசேகரன் முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு இதோ :

கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த பதிப்புலக ஆளுமை ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்  (76)  இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அரை நூற்றாண்டு காலம் தமிழுக்குத் தொண்டு செய்த அவருக்கு அஞ்சலி. அவரது மறைவால் துயரில் வாடும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு இரங்கல்.

கடின உழைப்பில் உருவான “க்ரியா” தமிழ் நவீன அகராதி முக்கியமான பதிப்பு. ஒரு பத்திரிகையாளனாக, அன்றாடப் பணிகளில் சொற்களின் பயன்பாடு பற்றி அய்யம் எழும்போதெல்லாம் தெளிவுபெற இன்றளவும் உதவி வரும் நூல். மரணப்படுக்கையிலும் அந்நூலை விரிவுபடுத்தி வெளியிடுவதில் முனைப்பு கொண்டிருந்தார் என்கிறார் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற த. ராஜன்

தன்னுடைய 45 ஆண்டுக் காலப் பதிப்புலகப் பயணத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு மூன்று புத்தகங்களையே பதிப்பித்திருக்கிறார். ஆனால், தமிழ்ப் பதிப்பகங்களில் அவர் தொட்டிருக்கும் துறைகளைத் தொட்ட பதிப்பகம் வேறு இல்லை. அசோகமித்திரன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, மௌனி, ஜி.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, பூமணி, திலீப் குமார், இமையம் என்று ‘க்ரியா’ வழி ராமகிருஷ்ணன் கொண்டுவந்த படைப்பாளுமைகளின் படைப்புகளும் சரி; காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி, ழாக் ப்ரெவர் என்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய படைப்பாளிகளும் சரி; நவீன தமிழ் வெளியின் இன்றைய கட்டமைப்பில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது.

தமிழ் இலக்கிய, அறிவுலகத்தில் ராமகிருஷ்ணன் போலப் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் மிகச் சிலரே. அவர் மறைந்தாலும் தமிழுக்கு அவர் தந்த கொடைகள், இன்னும் நூறாண்டுகள் பேசும்.