பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார்.

பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையாக இருப்பவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர், பிரிவோம் சந்திப்போம், கோரிப்பாளையம், விசாரணை, குற்றம் 23 ஆகிய படங்களிலும் நடத்துள்ளார். இன்று பிற்பகல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த அவர், பாஜகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஏற்கனவே மிஸ்ட் கால் கொடுத்து பாஜகவில் உறுப்பினராகி விட்டேன். சமூக சேவை செய்து வந்த நான், சமீப நாட்களாக தேசிய கட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றலாம் என்று ஆலோசித்தேன். அதன் காரணமாகவே முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து, இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நான் திடீரென எல்லாம் பாஜகவில் இணையவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பாஜக மட்டும் தான் மக்கள் பணியை சரியாக செய்துவருகிறது. ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக மட்டுமே கொடுத்து வருகிறது. மற்ற கட்சிகள் ஆட்சி நடத்திய போது எல்லாம் ஊழல் தலைவிரித்தாடியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சீன பிரதமரை மாமல்லபுரத்தில் தான் பிரதமர் சந்தித்தார். தமிழகத்தின் வளர்ச்சியிலும் பாஜக அதீத அக்கறை செலுத்தி வருகிறது. அதனால் தான் பாஜகவில் இணையலாம் என்று தேர்வு செய்தேன்.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன். அத்தோடு மக்கள் சேவையில் ஈடுபட, வரும் உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடவும் திட்டம் உள்ளது. தலைமை என்னை தேர்வு செய்தால் நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுக்காட்டுவேன்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி