பண மோசடி செய்த பிரபல சின்னத்திரை நடிகை கைது

சென்னை

பிரபல சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான அனிஷா பண மோசடிக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியான அனிஷா சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.   இவர் தனது கணவர் சக்திமுருகன் என்பவருடன் இணைந்து ஸ்கை எக்விப்மெண்ட்ஸ் என்னும் பெயரில் மின்சாதனக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சென்னையில் உள்ள கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கும் பிரசாந்த் என்பவரிடம் ரூ. 37 லட்சத்துக்கு 104 குளிர்சாதன பெட்டிகள் வாங்கிய அனிஷா காசோலை அளித்துள்ளார்.   ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்து விட்டது.  இதனால் பிரசாந்த் அனிஷாவிடம் பணத்தை கேட்டுள்ளார்.

பணத்தை தர மறுத்த அனிஷாவும் அவர் கணவரும் பிரசாந்தை மிரட்டி உள்ளனர்.  அதை ஒட்டி அவர் கலைஞர் கருணாநிதி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அவர்கள் அனிஷாவையும் அவர் கடையில் உதவியாளராக இருந்த அவருடைய உறவினர் ஹரிகுமார் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார்.   மேலும் அவர் நடத்தி வந்த டிராவல் ஏஜன்சியிலும் மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   காவல்துறையினர் சக்தி முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.