நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஃபானி புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால், அங்கு வசித்து வந்த சுமார் 300 பறவைகள் பலியாகி உள்ளதாக வனத்துறை தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள  ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது திசை மாறி ஒடிசாவை நோக்கி செல்கிறது. இதன காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்தகாற்றுடன்  மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது . இந்த கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளம் சரணாலயத்தில் உள்பட வெளிநாட்டு பறவைகள் உள்பட சுமார்  300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூந்தன்குளம் சரணாயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருந்து இனம்பெருக்கம் செய்வது வழக்கம்.  அங்கு பெய்த கனமழை காணரமாக,  பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் மரக்கிளை கூடுகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக செத்தன.

மேலும் ஏராளமான தாய் பறவைகளும், மரக்கிளை இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தன. சில பறவைகள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தன. மேலும் சில பறவைகள் இறந்து போனது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் திருமால், வனச்சரக அலுவலர் கருப்பையா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்த பறவைகளை மீட்டனர்.

பின்னர் வனத்துறையினர் அந்த பறவைகளை சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பலத்த சூறைக்காற்றில் ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது.

இதுபோல நாங்குநேரி பகுதியிலும் ஏராளமான விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

இதேபோல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதுபோல கொடைக்கானல், நீலகிரி மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.