30ந்தேதி ஃபனி புயல் எச்சரிக்கை: விவசாயிகளுக்கு தமிழக வேளாண்மைதுறை ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் மே1ந்தேதி  புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அப்போது  காற்றுடன் கனமழை பெய்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் தென்னை உள்பட பல்வேறு பல ஆண்டுகள் பலன் தரும் தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து  தமிழக வேளாண்மை துறை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

தென்னை மரங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்:

தென்னை மரங்களைப் பொறுத்தவரை மகசூல் தரும் தென்னை மரங்களில் தலைபாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும். எனவே, இளம் ஓலைகளைத் தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம்.

புயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால், தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

மா, பலா, முந்திரி மற்றும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள்:

காற்று வீசும் சமயம், காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில், பக்கவாட்டுக் கிளை களையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம். கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுக்க காப்பர் ஆக்ஸி குளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும்.

தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப் பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.

உரமிடுதல் போன்ற பணிகளுக்காக மரத்தை சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை தற்சமயம் மேற்கொள்ளாமல், கன மழை மற்றும் காற்று கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது.

வாழைத் தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் மழை நீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

விவசாயிகள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பருவமழை காலத்தில் மழை மற்றும் காற்றின் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.