மனைவி லதா மீது ரசிகர்கள் புகார்!: ரஜினி அதிர்ச்சி

னது மனைவி லதா மீது, ரசிகர் மன்றத்தினர் புகார் தெரிவித்து வருவதால் நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, தலைமை ரசிகர் மன்றத்தை மூட ரஜினி உத்தரவு பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் நேரடி அரசியலுக்கு வராத ரஜினி, சில தேர்தல்களின் போது வாய்ஸ் மட்டும் கொடுத்து வந்தார். 1996ல் அவர் கொடுத்த வாய்ஸூக்கு ஏற்ப, தி.மு.க – த.மா.கா. கூட்டணி வென்றது. அடுத்தடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிகளில் அவரது வாய்ஸ் எடுபடவில்லை.

இந்த நிலையில் அவர் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் முழக்கம் வலுத்துவந்தது. இதையடுத்து கடந்த டிசம்பரம் மாதம், தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார்.

தான் செய்யப்போவது ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும், சரியில்லாத சிஸ்டத்தை சரி செய்யப்போவதாகவும் கூறினார்.

மேலும், ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றுவதாகவும், தேர்தல் நேரத்தில் கட்சி குறித்து அறிவிப்பதாகவும் அதுவரை ரசிகர்கள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே சில முக்கிய பிசரச்சினைகளுக்கு கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினி, வேறு சில முக்கிய பிரச்சினைகளுக்கு கருத்து தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் பல, உள்ளூர் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது.  உதாரணமாக தூத்துக்குடியில், குற்றப்பின்னணி உள்ளவரை நிர்வாகியாக நியமித்ததாக மாவட்ட ரசிகர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர். அதே போல திண்டுக்கல்லில் நியமிக்கப்பட்ட நிர்வாகிக்கு எதிராகவும் அம்மாவட்ட ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.

மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல புகார்களை ரசிகர்கள் அனுப்பி வந்தனர். இதனால், ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகருக்கு பதிலாக, பழைய பொறுப்பாளர் சத்தியநாராயணாவை மீண்டும் பொறுப்புக்குக் கொண்டுவரும் முடிவை ரஜினி எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

லதா – ரஜினிகாந்த்

இந்த நிலையில் அவர் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக வட மாநிலம் சென்றார். இப்போதும் நிர்வாகிகள் மீது ரசிகர்கள் புகார் கடிதம் அனுப்புவது தொடர்ந்தது. அதில் பலர், ரஜினியின் மனைவி லதா மீது புகார் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரஜினி மன்றத்தினர் சிலரை சந்தித்து பேசினோம். தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அவர்கள், |” சூப்பர் ஸ்டார் (ரஜினி)தான் எங்கள் தலைவர். அவர்தான் எங்கள் உயிர். அவர்  காட்டிய வழியில்  நடப்போம்.  அவர்  கூறியபடி,  “ரஜினி மக்கள் மன்றத்துக்கு” புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். ஆனால் மாநில நிர்வாகிகளோ உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருக்கிறதே என்று எங்களை விரட்டுகிறார்கள். ஆனால் உறுப்பினர் சேர்க்கைக்குச் செல்லும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.  அதைத்தான் தலைவரின் கவனத்துக்கு அனுப்பினோம்” என்றனர்.

அந்த கடிதத்திதல்,, “தலைவா! நீங்கள் உத்தரவிட்டபடி மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினோம். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை.

முக்கிய பிரச்சினைகள் பலவற்றுக்கு ரஜினி கருத்து சொல்வதில்லையே. அரசியல் தலைவராக பரிணமித்துள்ள ரஜினிக்கு இது அழகா? இப்படி மக்கள் பிரச்சினை பலவற்றுக்கு மவுனம் காப்பவரை நம்பி எப்படி கட்சியில் சேர்வது” என்று மக்கள் கேட்கிறார்கள்.

மேலும் லதா மேடம் குறித்தும் பலவித புகார்களை மக்கள் தெரிவிக்கிறார்கள்.

“சென்னை மாநகராட்சி இடத்தை வாடகைக்கு பெற்று தொழில் நடத்தும் லதா, அதற்கு வாடகை கட்டவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதைக் கண்டித்து நீதிமன்றமே உத்தரவிட்டது.

அவர் நடத்தும் பள்ளியில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் சரவில்லை என்றும், இடத்துக்கு வாடகை அளிக்கவில்லை என்றும் புகார்கள் எழுகின்றன.

கோச்சடையான்  பட விவகாரத்தில் ஆட் பீரோ நிறுவனத்திற்கு தரவேண்டிய பணத்தை லதா தர மறுப்பதாக செய்திகள் வந்தன. பணத்தைத் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் லதா   தரவில்லை.

தமிழக மக்களை சட்டத்தை மீறக் கூடாது என்று ரஜினிகாந்த் சொல்கிறார். ஆனால் அவரது மனைவி மீதோ பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இவை குறித்து ரஜினி ஏதும் சொல்வதே இல்லை. வீட்டிலேயே சிஸ்டத்தை சரி செய்ய முடியாமல் மவுனம் காக்கும் ரஜினி, எப்படி நாட்டின் சிஸ்டத்தை சரி செய்வார்? அவரை நம்பி எப்படி மக்கள் மன்றத்தில் நாங்கள் சேர்வது” என மக்கள் எங்களை (ரசிகர்களை) கேட்கிறார்கள்.

இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.

தலைவா.. நீங்கள் எந்தவித சுயநலமும் இல்லாதவர். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளீர்கள்.

ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அதுவும் மனைவி மீதே பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருப்பது நமது அரசியலுக்கு நல்லது அல்ல.

ஆகவே லதா மேடம் குறித்த விவகாரங்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் மக்களிடம் முகம் கொடுக்க முடியும்” என்று சில ரசிகர்கள் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விசயம், ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து ரஜினி கடும் அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும், இதனாலேயே தனக்குச் சொம்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செயல்படும் ரஜினி மன்ற தலைமை அலுவலகத்தை மூட உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில்,  தன் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ரஜினி விளக்கம் கொடுப்பாரா அல்லது அரசியல் பயணத்தை ஒத்தி வைப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.