ரஜினியின் உத்தரவை மதிக்காத ரசிகர்கள்… மீண்டும் போஸ்டர் அடித்து அடாவடி…

மதுரை: போஸ்டர் அடிக்க கூடாது என தனது ரசிகர்களுக்கும், மக்கள் மன்றத்தினருக்கும் ரஜினி உத்தரவிட்ட நிலையில், அதை மதிக்காமல், மதுரையில் ரஜினி ரசிகர்கள் மீண்டும் போஸ்டர் அடித்து, ஒட்டி அடாவடி செய்துள்ளனர்.

கட்சியே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ரசிகர்களின் அடாவடி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு இப்போதே கண்ணை கட்டுகிறதாம்…

ஆன்மிக அரசியலுக்கு வரப்போவதாக கடந்த  2017ம் ஆண்டு  டிசம்பர் 31ந்தேதி  அறிவித்த ரஜினி, இதுவரை அரசியல் கட்சியின் பெயர் என்ன அதன் கொள்கை என்ன என்பது குறித்து அறிவிக்காமல், அவ்வப்போது அவரது ரசிகர்களை மட்டும் உசப்பேற்றி வருகிறது.

தொடர்ந்து படத்தில் நடித்துக்கண்டு,  பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ள ரஜினி, அரசியல் கட்சித் தொடங்காமல்,  பாஜகவின் ஊதுகுழலாக பணியாற்றி வருகிறார். 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள் என்று கூறி வரும் ரஜினி, இதுவரை அரசியலுக்கான அஸ்வாரம் கூடப் போடவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ரஜினி அரசியல் கட்சி குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ ஏதும் தெரிவிக்காத நிலையில், மனம் உடைந்த அவரது  ரசிகர்கள், போஸ்டர்கள் அச்சடிதத்து ஒட்டி, தங்களது மனநிலையை தலைமைக்கு தெரியப்படுத்தினர். நாளைய தமிழகமே நாளைய தமிழகமே… ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை, நான் எம்ஜிஆர் அல்ல எம்ஜிஆரைப்போல நல்லாட்சி தருவேன்,  நாளைய தமிழகமே, தலைவரால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தரமுடியும்,  திராவிட அரசியல் போதும்,  ஆன்மீக அரசியல் வேண்டும் என்றும் கூறி போஸ்டர்கள் ஒட்டினர்.

இப்போ வரலைன்னா எப்போதுமே இல்லை என்றும் நாசூக்காக தங்களது மனநிலையை தெளிவுபடுத்தினர்.  இந்த போஸ்டர்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது ரசிகர்களை கட்டுப்படுத்தும் வகையில், ரசிகர்கள் யாரும் தேவையின்றி போஸ்டர் அடிக்க வேண்டாம்,  தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், அவரது உத்தரவை காற்றில் பறக்க விட்ட அவரது ரசிகர்கள், மீண்டும் போஸ்டர் அடித்து அதகளப்படுத்தி உள்ளனர்.

போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று ரஜினி சொன்னதையே,  போஸ்டராக அடித்து ஒட்டி அதகளப்படுத்தியுள்ளனர் மதுரை ரசிகர்கள். இந்த போஸ்டரும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கட்சியே தொடங்காத நிலையில், ரஜினியின் பேச்சை மதிக்காமல் செயல்படும் அவரது ரசிகர்கள், ரஜினி ஒருவேளை கட்சித் தொடங்கினால், அவரது வார்த்தையை மதிப்பார்களா?