ரசிகர்கள் எதிர்ப்பு எதிரொலி: பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த மோகன்லால்

திருவனந்தபுரம்:

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடு வார் என கேரள பாஜக எம்எல்ஏ அறிவித்திருந்த நிலையில், தனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.  இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து மோகன்லால் பாஜகவில் இணைவார் என செய்திகள் பரவின.

இந்த நிலையில்,  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ ஓ ராஜகோபால், நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவித்திருந்தார்.

இது கேரளாவில் மோகன்லால் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பை உருவாக்கியது. மோகன் லாலுக்கு அனைத்துக்கட்சியிலும் ரசிகர்கள் இருப்பதால், அவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மோகன்லால் ரசிகர்கள் அவர், மக்களவை தேர்தலில் பாஜக  போட்டியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த மோகன்லால், தனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். அதனால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகனாக இருப்பதில்தான் தனக்கு சுதந்திரம் இருப்பதாக கூறியவர், அரசியலில் அவ்வாறு இருக்க முடியாது என்றும் தனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறி உள்ளார்.

இதன் காரணமாக பாஜகவின் கோரிக்கையை மோகன்லால் நிராகரித்துள்ளது தெளிவாகி உள்ளது.