சிட்னி: ஆஸ்திரேலியா வீராங்கனையின் சவாலை ஏற்று கண்காட்சி போட்டியில் பேட்டிங் செய்தார் சச்சின். இது பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். கண்காட்சி போட்டி இடைவேளையின்போது சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்மூலம் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்று  வேண்டுகோள் விடுத்தார்.

சச்சினும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து பதிலளித்த சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக விளையாடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பெர்ரி கோரிக்கையை ஏற்று விளையாடுகிறேன் என்றார்.

ஓய்வுக்குப் பிறகு, மைதானத்தில் சச்சின் விளையாடுவது இதுவே முதன்முறை என்பதால் அவரது ரசிகர்கள் குஷியாகினர். கண்காட்சிப் போட்டி இடைவேளையின் போது சச்சின் பேட் செய்ய சிட்னி மைதானத்துக்குள் நுழைந்தார். அப்போது குவிந்திருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் சச்சினை வரவேற்றனர்.

மைதானத்தில் அடியெடுத்து வைத்த சச்சின் பேட்டை தூக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எல்லிஸ் பெர்ரி மற்றும் அனேபல் ஆகியோர் சச்சினுக்கு பந்து வீசினர். முதல் பந்தை அவர்  பவுண்டரிக்கு தட்டிவிட்டார்.

முதல் 3 பந்துகளை லெக் சைடில் தட்டிவிட்டார். 4வது பந்தை தனது பேவரைட் கவர் ஷாட் ஆடினார். முதல் நான்கு பந்துகளை எல்லிஸ் பெர்ரி வீசினார். கடைசி 2 பந்துகளை அனேபல் வீசினார்.

ஸ்டெம்புகளை நோக்கி வந்த கடைசி இரண்டு பந்துகளை ஸ்ட்ரைட் ட்ரைவ் விளாசினார். சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண்டுகளித்தனர். டுவிட்டரில் இந்த போட்டி குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.