சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபனி புயல் குறித்தும், அதன் காரணமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 30ந்தேதி, ஏப்ரல் 1ந்தேதி தமிழகத்தில் புயல் காற்றுடன்  பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களிடம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

வரும் 30, 1 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

முன்னதாக  அனைத்து மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கை காரணமாக மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்த நிலையில் இருக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.