அரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்

ஃபரிதாபாத்

ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது

ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நிகிதா தோமர் என்னும் 21 வயது மாணவி கல்வி பயின்று வருகிறார்.   அவர் கல்லூரி சென்று வரும் போது அவரிடம் ஒரு இளைஞர் கேலி கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து நிகிதாவின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் துணிச்சல் அடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை காரில் கடத்த முயற்சி செய்துள்ளார்.  ஆனால் நிகிதா காரில் ஏற மறுத்து கூச்சல் போட்டுள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு இளைஞர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அனைவரும் தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறையினர் நிகிதாவுக்கு தொல்லை கொடுத்த இளைஞர் உள்ளிட்ட மூவரை 12 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.  இந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்திருந்தால் மகளை இழந்திருக்க மாட்டோம் என நிகிதாவின் பெற்றோர் கூறி உள்ளனர்.