மகாராஷ்டிராவில் வங்கிகள் இழுத்தடிப்பு….காரீப் பருவ கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு

மும்பை:

ஜூன் மாதம் என்பது விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான மாதமாகும். இந்த மாதத்தில் தான் விதைகளை வாங்கி பயிரிட்டாக வேண்டும். விதை விதைக்க கால தாமதம் ஆனால் அது உற்பத்தியை பாதித்து விவசாயியின் வருவாயை முடக்கிவிடும்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரூ. 34 ஆயிரம் கோடி விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது. இதன் மூலம் 50.6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பபட்டது. 40.8 லட்சம் விவசாயகள் வங்கி கணக்கில் ரூ.24,500 கோடியை கடந்த மே 31ம் தேதி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சுமார் 40 லட்சம் விவசாயிகளின் வங்கி கடனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது வங்கிகளின் பணியாகும். பழைய கடனை முடிவுக்கு கொண்டு வந்தால் இந்த ஆண்டிற்கான பயிர் கடனை விவசாயிகள் புதிதாக வாங்க முடியும். ஆனால், பல வங்கிகளில் இந்த கடனை வரவு வைக்கும் மிக தாமதமாக நடந்து வருகிறது. இதனால் அடுத்த கடன் பெற விவசாயிகள் தகுதியற்ற நிலையில் உள்ளனர். இந்த பணி தற்போதைக்கு முடிவடையும் நிலையில் இல்லை. அதனால் விவசாயிகள் இந்த ஆண்டு புதிதாக கடன் பெறுவது கேள்வி குறிதான் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 30 வரை 27 சதவீத விவசாய கடனை வழங்கி வங்கிகள் தங்களது காரீப் பருவ இலக்கை நிறைவு செய்திருந்தன. ஆனால் தற்போது இதை விட 5 சதவீதம் குறைவாகவே காரீப் பருவ கடன் இலக்கை அடைந்துள்ளன. கடந்த 27ம் தேதி வரை ரூ.43,342 கோடி, அதாவது 22 சதவீத கடன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியை தேசிய பணியாக மேற்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கும் அவர் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.