சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் பறிக்கப்படும் : சசிகாந்த் செந்தில்

மைசூர்

பாஜக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்தச் சட்டத் திருத்தத்தை முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக பாஜக அரசு நில சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.  இந்த திருத்தத்தின்படி விவசாய நிலங்களை யாரும் விலைக்கு வாங்க முடியும்.  இந்த திருத்தத்துக்கு மாநிலம் எங்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்   கர்நாடகத்தில் தொழில் அதிக அளவில் தொடங்க இந்த திருத்தம் வழி செய்யும் எனவும் விவசாயிகளின் நிலத்துக்கு நல்ல விலை கிடைக்கும் எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

மாநிலம் எங்கும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது.  இந்த போராட்ட தொடக்க விழா மைசூருவில் நடந்தது.   இந்த நிகழ்வு தேவராஜ் அர்ஸ் நினைவிடத்துக்கு அருகில் நடந்தது.    இதில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான சசிகாந்த் செந்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “பாஜக கொண்டு வந்துள்ள நிலச் சீர்திருத்தச் சட்டத் திருத்தம் மூலம் பல சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளை நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.   இந்த சட்டத் திருத்தம் இன்னும் 5 வருடங்களில் பலரை நிலமற்றோர் ஆக ஆக்கி விடும்.   இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு உள்ள போதிலும் அரசு இதை அமலாக்கப் பெரிதும் முயன்று வருகிறது.

முந்தைய மறைந்த முதல்வர் தேவராஜ் அர்ஸ் கொண்டு வந்த நில சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் பல உழவர்கள் நில உரிமையாளர்கள் ஆகி அவர்களைப் பெருமையுடன் வாழ வடித்தது.  அந்த சட்டத்தின் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு தாங்கள் உழுத நிலம் சொந்தமானது.  அது ஒரு தைரியமான நடவடிக்கை.   வேறு மாநிலங்களில் இது இல்லை என்பதால் நாம் பெருமை அடைய வேண்டும்.

ஆனால் பாஜக அரசு அதற்கு மாறாக விவசாயிகலிடைருந்து நிலத்தை அபகரிக்கத் திட்டம் தீட்டி உள்ளது.  மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் இணைந்து அமல்படுத்தி உள்ள இந்த திருத்தம் மக்களுக்கு எதிரானது.  இவற்றை யாராலும் ஒப்புக் கொள்ள முடியாது.  சுதந்திரத்துக்குப் பிறகு எந்த ஒரு அரசும் இது போல மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. ” எனத் தெரிவித்துள்ளார்.