டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம்  தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக கூறி, மோடி அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விடும் என்று அதை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி மாநில எல்லையில், அரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 43 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால், டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தை கைவிடும்படி மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன. மேலும்,  மத்திய அரசு, விவசாயிகளுடன் 7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்,  மேலும் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்த்து மூன்று பேர் மனுதாக்கல் செய்த நிலையில்,  அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த  நீதிபதிகள், மத்திய அரசு இன்று நடத்தும் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை வரும் 11ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.