சென்னை:  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், யாரை பாதுகாக்க இவ்வளவு அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என வள்ளூவர் கோட்ட உண்ணாவிரத போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக கூட்டணி கட்சியினர் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத  போராட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.   இதில், மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  மேலும், அனைத்து கட்சியைச் சோர்ந்த தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு எதிரான, மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே கொந்தளித்துள்ளது, கடுமையான குளிரிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து போய் உள்ளது. எதற்காக இவ்வளவு அவசரம், யாரை பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்?.

மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது, விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான் அது ‘இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ என்பது தான்ஆனால், விவசாயிகளை, அந்நிய கைகூளி, மாவோலிஸ்ட், தீவிரவாதி என மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.

விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும்’,  என்று கூறிய ஸ்டாலின் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.