டெல்லி: விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்த உள்ளதாக  உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வர, உச்ச நீதிமன்றம் அந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, தீா்வு காண 4 பேர் கொண்ட குழுவையும் நியமித்து உத்தரவிட்டது.

அக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் கூறியதாவது: விவசாயிகளுடனான முதல் சந்திப்பு ஜனவரி 21ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகளுடன் நேரில் சந்திப்பு நடத்தப்படும்.

வர முடியாத அமைப்புகளுடன் காணொளி காட்சி மூலம் சந்திப்பு நடைபெறும். அரசு தரப்பில் எங்களுடன் பேச விரும்பினால், நாங்கள் அவர்களையும் வரவேற்கிறோம். அவர்களின் கருத்துகளை கேட்கவும் தயாராக உள்ளோம் என்றார். விவசாயிகளுடன் நாளை மத்திய அரசானது 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.