முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு : சத்திஸ்கர் முதல்வர்

ராய்ப்புர்

த்தீஸ்கர் மாநில முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயக்கடன் தள்ளுபடி உத்தரவு நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.   சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் தேர்ந்தெடுக்கபட்டுள்ளர்.    அவர் 5 முறை பதான் சட்டப்பேரவை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    இன்று மாலை 4.30 மணிக்கு அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ் பாகல், “ சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த உத்தரவு நிறைவேற்றப்படும்.    தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.  எங்களின் முதல் கடமை அவர் வாக்குறுதியை நிறைவேற்றுவதே ஆகும்.

கடந்த 2013 ஆம் வருடம் ஜிராம் பள்ளத்தாக்கில்ல் நடந்த நக்சல் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் மரணம் அடைந்தனர்.   அது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உள்ளோம்.   அது குறித்த அறிவிப்பும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் வெளியாகும்.

இந்த அரசு விவசாயிகள், பழங்குடியினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் நலனில் அக்கறையுடன் நடந்துக் கொள்ளும். ” என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பதவிக்கு வந்த 10 நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறி இருந்தது.