திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பொதுத்துறை வங்கியின் கெடுபிடி வசூல் நடவடிக்கையால் ஒரு விவசாயி மரணம் அடைந்துள்ளார்

திருவணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கிராமம் போந்தை.  இங்கு வசித்து வரும் ஞானசேகரன் என்னும் விவசாயி ஒரு பொதுத்துறை வங்கியின் சாத்தனூர் கிளையில்  கடன் வாங்கி டிராக்டர் வாங்கி உள்ளார்.   நான்கு ஆண்டுகளாக கடனுக்கான தவணைகளை ஒழுங்காக கட்டி வந்துள்ளார்.   ஆனால் கடந்த இரு வருடங்களாக வறட்சி காரணத்தால் அவர் கடனுக்கான தவணைகளை செலுத்த முயலாமல் தவித்துள்ளார்.

வங்கி நிர்வாகம் இவருடைய கடனை வசூலிக்க தனியார் வசூலிப்பு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.   அந்த நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் ஞான சேகரன் வீட்டு வாசலில் வந்து தாறுமாறாக கூச்சல் போட்டுள்ளனர்.   அவருடைய டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.   ஞான சேகரன் இரு மாதங்களில் கடன் செலுத்தி விடுவதாக அவர்களிடம் கெஞ்சி உள்ளார்.   ஆனால் அவர்கள் அதை கவனியாமல் டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை ஞானசேகரன் தடுக்கவே,  அந்த நால்வரும் இவரை வேகமாகப் பிடித்து தள்ளி உள்ளனர்.  மயங்கிக் கீழே விழுந்த ஞானசேகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.   அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்துள்ளனர்.  உடல்நிலை தேறாததால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிர் இழந்துள்ளார்.

ஞான சேகரனின் மரணத்தை பற்றிய செய்திகளும், டிராக்டரை பறித்துச் செல்லும் காட்சிகளும் ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.   இதற்கு நெட்டிசன்கள் மட்டும் இன்றி பல அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.   “மல்லையா போன்ற பெரிய தொழிலதிபர்களை தப்பிக்க விடும் வங்கி நிறுவனங்கள் இது போன்ற ஏழை விவசாயிகளின் உயிரைப் பறிக்கின்றன” என பா ம க வின் தலைவர் அன்புமணி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.