விற்பனை இன்றி நாங்கள் வாடும் போது பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதியா? : கொதிக்கும் விவசாயிகள்

புனே

த்திய அரசு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெங்காயம் அதிக அளவில் விளைகிறது.   கடந்த மாதம் இந்தப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக  இந்த வெங்காயப்பயிர்கள் பெருமளவில் நாசமடைந்தன.   அதனால் நாடெங்கும் வெங்காய விலை கிடுகிடு என உயர்ந்தது.   தற்போது சென்னை நகரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 வரை விற்கப்படுகிறது.  இந்த விலையைக் குறைக்க மத்திய அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது.

அதையொட்டி கனிம உலோக வர்த்தக நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட உள்ளது.  நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, எகிப்து, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.   இது வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் ஒன்றான  மகாராஷ்டிர விவசாயிகளுக்குக் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜு ஷெட்டி, “ஒப்பந்தப்படி வரும் நவம்பர் இறுதியில் வெளிநாட்டில் இருண்டு வெங்காயங்கள் வந்து சேரும்.   அதே கால கட்டத்தில்  உள்நாட்டு உற்பத்தி வெங்காயமும் அறுவடை நடைபெறும்.  எனவே விவசாயிகளுக்கு அவர்கள் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்க வழியில்லாத நிலை உண்டாகும்.

இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.  இந்த அரசு விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வருமானம் கிடைக்காமல் இருக்க இது போன்ற திட்டங்களையும் அறிவித்து வருகிறது.” எனக் கோபத்துடன் தெரிவித்தார்.

You may have missed