காவிரி பாய்ந்தும் பயனில்லை!: கடைமடை விவசாயிகள் கண்ணீர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் தண்ணீர், பெருகினாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் கண்ணீர்வடிக்கிறார்கள்.

தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால்  கர்நாடகாவில் உள்ள, கபினி மற்றும் கிருஜ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன.  அந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், 25 நாட்களுக்கும் மேலாக, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்தால்  மேட்டூர் அணையில் இருந்து, நீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. .

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணை சென்று, அங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை டெல்டா மாவட்ட பாசனத்திற்கு  திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் பெருக்கெடுத்து பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த, 25ம் தேதி முதல், பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், தூர் வாரும் பணிகள் நிறைடையவில்லை. ஆகவே  கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 147 கி.மீ.,க்கு துார் வார வேண்டிய நிலையில், 120 கி.மீ., பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதில், அய்யன் வாய்க்கால், திருவரங்கம் நாட்டு வாய்க்கால் ஆகியவற்றில் மட்டும், கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைந்து இருக்கிறது.  69 கி.மீ. நீளமுள்ள, கட்டளை மேட்டு வாய்க்காலில், 59 கி.மீ.,க்கும்; 90 கி.மீ., புள்ளம்பாடி வாய்க்காலில், 54 கி.மீ.,க்கும்; 41 கி.மீ., பெருவளை வாய்க்காலில், 34 கி.மீ.,க்கும் தண்ணீர் சென்றடைந்திருக்கிறது. உய்யக்கொண்டான் வாய்க்கால் தலைப்பில், 10 கி.மீ.,க்கு மட்டுமே, தண்ணீர் சென்றடைந்துள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி ஒன்றியத்தில் ஆரம்பித்து  மணமேல்குடி ஒன்றியம் வரை, 36 கிராமங்களில், 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், காவிரி கடைமடை பாசன பகுதிகளாக விளங்குகின்றன.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், ஐந்து நாட்களுக்கு பிறகே, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும். சில தினங்களுக்கு முன், கடை மடை பகுதிக்கு தண்ணீர் வந்தது.
இந்த நிலையில், 26ம் தேதி, கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.   இதனால், இரண்டு நாட்களாக, கடைமடை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கல்வாய் ஆகிய  நான்கு ஆறுகளாக, காவிரி பிரிந்து, பாய்கின்றது. இவற்றில் , கல்லணையில் இருந்து பாசனம் பெறுவதில், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவை கடைமடை பகுதிகளாகும். அதில், 15க்கும் மேற்பட்டவாய்க்கால்கள் இருக்கின்றன. கல்லணை கால்வாயில், 3,000 கன அடி தண்ணீர் திறந்து, ஒரு வாரம் ஆகியும், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கால்வாய் சீரமைப்புக்கு பின், 2,000 கன அடியாக நீர் திறப்பு குறைந்ததால், கடைமடைக்கு தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

 

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில், 3.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 22ம் தேதி கல்லணை திறக்கப்பட்டதையடுத்து வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு உட்பட, மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஓடும் ஆறுகளில், தண்ணீர் செல்கிறது. ஆனால், ‘வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், குளம், குட்டைகளுக்கு தண்ணீர்விட இயலாத சூழல் நிலவுகிறது.

மேலும் நன்னிலம் தாலுகாவில் ஓடும் ஆறுகளான, விளப்பாறு, புத்தாறு, முடிகொண்டான் ஆறுகள், காவிரியில் இருந்து, நேரடியாக பிரிகின்றன.இந்த ஆறுகளில், ஆங்காங்கே, பாலங்கள்
கட்டப்பட்டு வருகின்றன. இதனால்  நன்னிலம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை.

நாகை  

கல்லணையில் திறக்கப் படும் தண்ணீர், வெண்ணாற்றில் இருந்து, நாகை மாவட்ட பாசனத்திற்காக, வெட்டாறு, ஓடம்போக்கி என, இரு பிரிவாக பிரிந்து, பாசன வாய்க்கால்களில் திறந்துவிடப்படும்.  இப்பகுதிகளில், தண்ணீர் செல்லும் வடக்கு ராஜன், புது வாய்க்கால், வடக்கு சேத்தி, தெற்கு சேத்தி வாய்க்கால்கள், 10 ஆண்டுகளாக துார்வாரப் படாமல் மேடாகி, செடி, கொடிகள் மண்டிக் கிடக்கின்றன.

மொத்தம், 24 கி.மீ., நீளும் இந்த வாய்க்கால்களை துார்வார , விவசாயிகள்  நீண்ட நாட்களாக வலியுறுத்தியும் பலனில்லை. பாண்டவையாற்றில் காவிரி நீர் கரை புரண்டு ஓடிவந்த போதிலும், பாசன வாய்க்கால்களை துார்வார, அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்த நிலையில், ஒரு ஏக்கருக்கு, 600 ரூபாய் வீதம் வசூல் செய்து, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் பாசன வாய்க்கால்களை, விவசாயிகளே துார்வாரி வருகின்றனர்.

கடந்த ஏழு வருடங்களாக குறுவை சாகுபடி  செய்யமுடியாமல் விவசாயிகள் துயரத்தில் இருந்தனர். ஆனால் தற்போது, மேட்டூர் அணை திறந்தும் பயனில்லை.

இதுதான் நிலவரம்

கல்லணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக, வெண்ணாற்றில் திறக்கப்படும் நீர்,  36 முக்கிய ஆறுகளில் பாய்ந்து, 1,505 கிளை ஆறுகளில் பிரிந்து, பி.சி.டி., சானல் வாய்க்கால்கள் என, 11 ஆயிரம் வாய்க்கால்களில் பிரிந்து, 36 ஆயிரத்து 241 கி.மீ., கடந்து, கடைமடைக்கு சென்றடைகிறது.  இந்த வாய்க்கால்களை, 30 வருடங்களாக பொதுப் பணித்துறை, சரிவர துார் வாரவில்லை. இதனால் வாய்க்கால்களில் பல இடங்களில் தடைகள் ஏற்பட்டு நீர் செல்ல முடியாத நிலை.

இந்த ஆண்டு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், துார்வாரும் பணிக்கு, 315 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் மிகக்  குறைந்த இடங்களிலேயே துார் வாரப்பட்டுள்ளன. உட்கிராமங்களில் விளை நிலத்திற்கு செல்லும் வாய்க்கால்கள், துார் வாரப்படவில்லை. இதனால் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வராத நிலையில்  கடைமடை விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

 

 

You may have missed