விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி: திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் அறிவிப்பு

சென்னை:

விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று  திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று விவசாய கடன் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் திருத்தத்தை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19-3-2019) வெளியிட்டிருக்கும் நாடாளுமன்ற திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குழு விவசாயிகளின் அனைத்து வகைப் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதற்குப் பதிலாக, விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் விருப்பத்தை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.