அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு: அய்யாக்கண்ணு தகவல்

சென்னை:

நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைலவர்  அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு டில்லியில் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையிலும் மத்திய அரசு விவசாயிகள் குறித்து கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் டில்லியை விவசாயிகள் முற்றுகையிட போவதாக அறிவித்து உள்ளனர். அடுத்த மாதம் (நவம்பர்) 28, 29, 30ந்தேதிகளில்  நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த போராட்டத்தில்,  இந்திய அளவில் 30 லட்சம் விவசாயிகள்  பங்கேற்க இருப்பதாகவும், தமிழகத்தில் இருந்து 3000 பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும், தங்களது போராட்டத்துக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும்   அய்யாக்கண்ணு  கூறினார்.