தென்னை மரங்களைக் குரங்குகளிடம் இருந்து காக்கத் தமிழக விவசாயிகள் நூதன ஐடியா

ம்பூர்

தென்னை மரங்களைப் பாழாக்கி வரும் குரங்குகளிடம் இருந்து மரங்களைப் பாதுகாக்க ஆம்பூர் விவசாயிகள் புதிய முறையை கையாள்கின்றனர்.

வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகளை நோக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக  யானைகள், காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்குகள் போன்ற வன விலங்குகளால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே யானைகள் நடமாட்டம் உள்ளது.   அதைப்போல் காட்டுப்பன்றிகள் குறிப்பிட்ட சில பயிர்களை மட்டுமே சேதப்படுத்துகின்றன.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தென்னை மர வளர்ப்பு  முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளிக்குப் பின்னர் தேங்காய் விலை உயர்வு காரணமாக இங்குள்ள தென்னை மர விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.  தற்போது மாந்தோப்பு, தென்னந்தோப்பு, கொய்யாத்தோப்பு ஆகியவற்றை வைத்துள்ள விவசாயிகள் ஒரு பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைக்கு இந்த  விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குரங்குகள் ஆகும்.  குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஓட்டு வீடுகள் மற்றும் ஓலை வீடுகளைச் சேதப்படுத்துவது, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது, தோட்டங்களில் புகுந்து பழ வகை மரங்களைச் சேதப்படுத்துவது என குரங்குகள் சேட்டை அதிகமாக உள்ளது.

இந்த பகுதி விவசாயிகள் குரங்குகளின் இந்த சேட்டையால் ஏற்படும் பாதிப்பால் மன வேதனை அடைந்தனர். ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குரங்கு தொல்லைகளிலிருந்து தென்னை மரங்களைக் காப்பாற்ற புதிய யுத்தி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.  அதாவது ஒவ்வொரு தென்னை மரத்திலும் பாம்பு உருவங்களை வண்ண வண்ண கலவைகளைக் கொண்டு வரைந்து உள்ளார்கள்.

பாம்பு உருவங்களை வரைந்த தென்னை மரங்களை நோக்கி வருவதை குரங்குகள் அடியோடு நிறுத்தி உள்ளன.   மாறாகப் பாம்பு உருவங்கள் வரையப்படாத தென்னை மரங்களை நோக்கி இப்போது படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.  அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளும் இப்போது தங்களுடைய தென்னை மரங்களுக்குப்  பாம்பு உருவங்களை வரையத் தொடங்கி உள்ளார்கள்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Coconut tree, farmers, monkeys, Patrikaidotcom, snake picture, tamil news, குரங்குகள், தென்னை மரங்கள், பாம்புப் படம், விவசாயிகள்
-=-