சேலம்:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பேண, மாநிலஅரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளன.

இந்த சலுகைகளுக்கான அறிவிப்பில், விவசாயிகளுக்கு எந்தவொரு நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை என்று ஐ.என்.ஆர்.எல்.எஃப் பொதுச் செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து, இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில், மாவட்டங்களும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பள்ளிக்கல்லூரிகள், தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது.

மக்கள் ஏப்ரல் 14ந்தேதிவரை 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விவசாய பெருமக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்படவில்லை. இது வேதனைக்குரியது.

தமிழகம் உள்பட  நாடு முழுவதும்  பொதுவாக இந்த மாதம்  மா, தர்பூசணி, வெள்ளைப் பூசணி, வெள்ளரி பிஞ்சு மற்றும் முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் பயிர்களின்  விளைச்சல்  மற்றும் விற்பனை அமோகமாக இருக்கும். இந்த சீசனை கருத்தில்கொண்டே  தமிழகத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் மா, பலா, தர்பூசணி, வெள்ளரி   மற்றும் முலாம்பழம் உற்பத்தில் கடந்த  சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போது, விளைச்சல் முடிந்து,  அறுவடை செய்யப்பட் டுவிற்பனைக்கு செல்லும் வேளையில்,  அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்கள் அறுவடை செய்யும் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பழங்களுக்கான விற்பனை  சந்தை மற்றும் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும், விளைச்சல் இழப்பை கணக்கிட்டு, அதற்கேற்றார் போல  அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்திலும்,  விவசாயத் தொழிலாளர்களுக்கு வயல்களில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் பயிரிடப்பட்டுள்ள ஏராளமான பயிர்கள்  நாசமாகும் சூழல் ஏற்பட்டு விடும்

விவசாயிகளுக்கு  குறைந்த விலையில் உரங்கள்,விதைகளை  வழங்கப்பட வேண்டும். உரங்கள் மற்றும் விதைக் கடைகள் அத்தியாவசிய சேவைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், கிராம  நிர்வாக அலுவலரை சந்தித்து கோரிக்கை விடுப்பின், அவர்களது விவசாய நிலத்தில் பணி செய்ய தேவைப்படும் பொழுது, தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

இதுபோன்ற சிறுசிறு உதவிகளின் மூலம் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.  மேலும் விவசாய பயிர்கள் நாசமாவதும் தவிர்க்கப்படும். இதன் காரணமாக விவசாயிகள் நிலமும் உரிய முறையில் பராமரிக்க முடியும்.

இதற்கான அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் உடனே பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.